விரைவில் இந்தியா மீண்டும் ஒரு சாதனையை விண்வெளித்துறையில் நிகழ்த்த உள்ளது.
விண்வெளித்துறையில் அடுத்தடுத்த மைல்கல்களை எட்டி வரும் இந்தியா மீண்டுமொரு சாதனையை நிகழ்த்த தன்னை தயார்படுத்தி வருகிறது. அதுதான் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம். 2022ஆம் ஆண்டு ககன்யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கான பணிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி 3 வீரர்களை சுமந்து செல்லும் விண்கலமானது பூமியின் சுற்று வட்டப்பாதையில் 400 கிலோ மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்படும். இதில் அனுப்பப்படும் விண்வெளி வீரர்கள் மூவரும் 7 நாட்கள் வரை அங்கிருந்து ஆய்வுகளை மேற்கொள்வர்.
இந்தியாவின் கனவுத் திட்டமான ககன்யான் திட்டத்தை நிறைவேற்ற விண்வெளித்துறையில் வளர்ந்த நாடான ரஷ்யாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. விண்வெளி வீரர்களை தேர்ந்தெடுப்பது, மருத்துவ சோதனை செய்வது மற்றும் விண்வெளிக்கு செல்வதற்கான பயிற்சிகளை அளிப்பது ஆகிய மூன்று பணிகளை ரஷ்யா மேற்கொள்ளும்.
உலகம் முழுவதுமுள்ள விண்வெளி வீரர்களில் 60 சதவிகிதம் பேர் டெஸ்ட் பைலட்டுகள் தான். விமான இயக்கத்தில் வல்லுனர்களான டெஸ்ட் பைலட்டுகள், புதிய போர் விமானங்கள் உள்ளிட்டவைகளை பரிசோதிப்பர் என்பதால் விண்வெளிக்கு செல்வதற்கான மனம் மற்றும் உடல் வலிமை இவர்களிடம் இருக்கும்.
எனவே இந்தியாவும் முதற்கட்டமாக டெஸ்ட் பைலட்டுகளை தான் விண்ணுக்கு அனுப்ப உள்ளது. இதற்காக தலா மூன்று டெஸ்ட் பைலட்டுகள் கொண்ட மூன்று குழுக்கள் தேர்வு செய்யப்படும். இவர்களில் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு விண்ணுக்கு அனுப்பப்படுவர்.
இந்தியாவில் பெண் டெஸ்ட் பைலட்டுகள் இல்லாததால் முதல் பயணத்தில் ஒரு பெண் இடம் பெறுவதற்கான வாய்ப்பில்லை. இந்தியா விண்ணுக்கு அனுப்பும் வீரர்களின் வயது 28 முதல் 38 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கும் எனத் தெரிகிறது. விண்வெளிக்கு அனுப்பப்படும் வீரர்களை தேர்வு செய்யவே 12 முதல் 14 மாதங்கள் வரை ஆகும் என சொல்லப்படுகிறது.
இவர்களுக்கு உளவியல் மற்றும் மருத்துவ சோதனை செய்ய 3 மாதங்கள் ஆகும். தனிமையை எதிர்கொள்ளுதல், சூழ்நிலைக்கு தகுந்தபடி துரிதமாக முடிவெடுக்கும் திறன், விண்ணுக்கு செல்லும் போது உடலில் ஏற்படும் மாற்றங்களை எதிர்கொள்வது உள்ளிட்ட திறன்கள் பரிசோதிக்கப்படும்.
முதற்கட்டமாக இந்தியாவில் பயிற்சி பெறும் வீரர்கள், விண்வெளி சூழலை எதிர்கொள்வதற்கான பிரதான பயிற்சிக்கு ரஷ்யா செல்கின்றனர். திட்டமிட்டபடி 2022ஆம் ஆண்டு இந்தியா மனிதர்களை விண்ணுக்கு அனுப்பிவிட்டால், விண்வெளித்துறையில் சர்வ வல்லமை பொருந்திய நாடாக இந்தியா உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.