டெக்

வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது மைக்ரோசாட்‌-ஆர் செயற்கைக்கோள் !

வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது மைக்ரோசாட்‌-ஆர் செயற்கைக்கோள் !

Rasus

மைக்ரோசாட்‌-ஆர், கலாம் சாட் ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்‌எல்வி -சி 44 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்த 'மைக்ரோசாட்- ‌ஆர்' செயற்கைக்கோளும், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற அமைப்பு மற்றும் மாணவர்கள் இணைந்து தயாரித்த 'கலாம் சாட்' செயற்கைக்கோளும் நேற்றிரவு விண்ணில் ஏவப்பட்டன. ‌‌ 'மைக்ரோசாட்‌- ஆர்' செயற்கைக்கோள் புவி அமைப்பு மற்றும் நாட்டின் எல்லை பகுதிகளை கண்காணிக்கவும், மிகச்சிறிய அளவிலான 'கலாம் சாட்' என்ற செயற்கைக்கோள் ஹாம் ரேடியோ சேவைக்காகவும் அனுப்பப்பட்டன. ஆந்திரா மாநி‌லம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்‌எல்வி-சி 44 ராக்கெட், இரண்டு செயற்கைக்கோள்களையும் சுமந்தபடி சரியாக இரவு 11.37 மணிக்கு, விண்ணில் பாய்ந்தது.

13 ஆவது நிமிடத்தில், 'மைக்ரோசாட்‌-ஆர்' செயற்கைக்கோள் பூமியில் இருந்து 277 கிலோ மீட்டர் தூரத்தில் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. 450 கிலோ மீட்டர் தூரத்தில் கலாம் சாட் செயற்‌கக்கோள் நிலைநிறுத்தப்பட்டது. 2 செயற்கைக்கோள்களும் வெற்றிகமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் ‌ஒருவருக்கொருவர் கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

வெற்றிக் கொண்டாட்டத்தைத் தொடர்ந்து பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், திறமையுள்ள இளைஞர்களால் அறிவியல் சார் தேசமாக இந்தியா உருவெடுக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று கூறினார். உலகிலேயே சிறிய ரக செயற்கைக் கோளை உருவாக்கிய மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். மாணவர்கள் ‌தயாரிக்கும் செயற்கைக்கோள்களை அனுப்ப இஸ்ரோ தயாராக இருப்பதாகவும் சிவன் கூறினார்.

பிஎஸ்எல்வி மூலம் 2019-ஆம் ஆண்டில் முதல் பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளதாகவும், இந்த வருடம் 32 ராக்கெட்களை ஏவ திட்டமிட்டுள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் குறிப்பிட்டார்.