இஸ்ரோ அனுப்பிய முதல் ராக்கெட்டின் திட்ட இயக்குனர் அப்துல் கலாம் என்றால் நூறாவது ராக்கெட்டின் வடிவமைப்பில் முக்கிய பங்காற்றியவர் தற்போது இஸ்ரோ தலைவராக இருக்கும் நாராயணன். இந்தியா தனது நூறாவது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் அனுப்பி சாதனை படைத்துள்ள நிலையில் 1979 முதல் 2025 வரை இஸ்ரோ அனுப்பிய ராக்கெட் குறித்து பார்க்கலாம்...
1980களில் இஸ்ரோவின் பட்ஜெட் ரூ. 100 கோடிக்கும் குறைவே. தற்போது இஸ்ரோவின் பட்ஜெட் ரூ. 18 ஆயிரம் கோடியை கடந்துவிட்டது. பட்ஜெட்டில் மட்டும் பெரிதாகவில்லை, சாதனையிலும் பெருமிதப்பட வைக்கிறது இஸ்ரோ.
2008-ல் இந்தியாவின் முதல் நிலவுப்பயணமான சந்திராயன் 1, முதல் செவ்வாய் பயணமாக 2013-ல் மங்கள்யான், 2019-ல் சந்திரயான் 2, 2023-ல் சந்திரயான் 3, 2023-ல் ஆதித்யா எல்1 என இஸ்ரோவின் பாய்ச்சல் தொடர்கிறது.
1979 ஆகஸ்ட் 10, தற்போது இருக்கும் தொலைதொடர்பு சாதனங்கள் எதுவும் சாமானிய மக்களிடம் அறிமுகமாகாத காலம். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ரஷ்ய தொழில்நுட்பத்தில் இந்தியர்களால் வடிவமைக்கப்பட்டது SLV3 ராக்கெட். அதுவரை இந்தியா வடிவமைத்த செயற்கைக்கோளை சோவியத் யூனியனே அனுப்பியது.
அதற்கு மாற்றாக இந்தியர்கள் உருவாக்கிய முதல் செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குனராக இருந்தவர் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம். முதல்படியிலேயே வெற்றிகள் வசமாவதில்லை. SLV3 ராக்கெட் விண்ணில் பாய்ந்த தருணத்தில் அதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் திட்டம் தோல்வியடைந்தது. ஆனால் அடுத்த ஆண்டு தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு SLV வகை ராக்கெட் வெற்றிகரமாக செயற்கைக்கோளை நிலை நிறுத்தியது.
1994 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் வெற்றிகரமான ராக்கெட்டான பிஎஸ்எல்வியும், 2001 ம் ஆண்டு GSLV ராக்கெட்டும் இந்தியாவின் செலுத்தும் வாகனங்களாக இருக்கின்றன. இந்த 46 வருடத்தில் இந்தியா அனுப்பிய 100 ராக்கெட் மூலமாக 548 செயற்கைக்கோள்கள் விண்ணில் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் இஸ்ரோ தலைவர் நாராயணன்.
இதுபற்றி மேலும் அவர் தெரிவிக்கையில், “1979-1983 காலகட்டத்தில் SLV வகை ராக்கெட் 4 திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டன. ASLV இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் இடைநிலை முன்னேற்றமாக 1987-1994 இடையே 4 திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டன. PSLV இந்தியாவின் மிகவும் நம்பகமான ஏவுகணை. இதன் மூலம் 62 மிஷன்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவின் முக்கிய விண்வெளி திட்டங்கள் மற்றும் செயற்கை கோள்களை மட்டுமல்லாது உலக அளவில் பல நாடுகளின் செயற்கைக்கோள்களையும் இந்தியா தனது ராக்கெட் மூலமாக அனுப்பி உள்ளது.
நூறாவது ராக்கெட் என்கிற வரலாற்று சாதனையை இந்தியா படைத்துள்ள நிலையில், வரும் காலத்தில் மறுபயன்பாட்டு ராக்கெட் மனிதர்களை விண்ணிற்கு சுமந்து செல்லும் சிறப்பு ராக்கெட் போன்றவற்றை இஸ்ரோ உருவாக்கி வருகிறது. ராக்கெட் இயங்க தேவையான கிரையோஜினிக் இன்ஜின் வடிவமைப்பிலும் முன்னோடியாக திகழும் இந்தியா, மின்சாரம் மூலம் இயங்கும் ராக்கெட் வடிவமைப்பிற்கான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறது. அறிவியலின் வளர்ச்சியை விண்வெளிவரை கொண்டு சென்றுள்ள இஸ்ரோ, மேலும் பல ஆராய்ச்சிகளை தொடர்ந்து கொண்டிருக்கிறது” என்றார்.