டெக்

ஆப்பிள் ஐபோன் டென் சோதனை முடிவில் அதிர்ச்சி

ஆப்பிள் ஐபோன் டென் சோதனை முடிவில் அதிர்ச்சி

webteam

ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ஐபோன் டென் வகை ஸ்மார்ட்போன்கள் எளிதில் உடையக்கூடியவையாக உள்ளதாக சில சோதனை அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஸ்மார்ட்போன் ஐபோன் டென். பல நவீன தொழில்நுட்பங்களுடன் இந்திய மதிப்பில் சுமார் 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் இந்த மாடல் போனிற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த போனின் பின்புறம் கண்ணாடியால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போனை சோதித்த ஸ்கொயர் டிரேட் என்ற காப்பீட்டு நிறுவனம் சில அடி உயரத்திலிருந்து விழுந்ததிலேயே போன் செயலிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளது. சுமார் ஆறடி உயரத்திலிருந்து பக்கவாட்டில் கீழே விழுந்தபோது அதன் திரை செயலிழந்துவிட்டதாகவும், பின்புற கண்ணாடி முழுவதும் சேதமடைந்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. திரை கீழே படும்படி விழுந்தபோது முகத்தை அடையாளம் காணும் வசதி செயலிழந்துவிட்டதாகவும் சோதனையில் தெரியவந்துள்ளது.

அதே நேரம் தண்ணீரில் 5 அடி ஆழத்தில் 30 நிமிடம் வரை எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது. ஐபோன் டென் வகை போன்கள் சேதமடைந்தால் திரையை மாற்றுவதற்கு முந்தைய மாடல்  போன்களுக்கு செலவிட்டதைபோல் இரண்டு மடங்கு செலவு செய்யவேண்டும் என்றும் ஸ்கொயர் டிரேட் நிறுவனம் கூறியுள்ளது. ஐபோன் டென்னில் பயன்படுத்தப்பட்டுள்ள கண்ணாடி அதற்கு முந்தைய மாடல்களைவிட 50 சதவீதம் கூடுதல் வலுவானவை என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அம்சம் குறித்து கவலைகொள்ளும் வாடிக்கையாளர்கள் ஐபோன் டென்னிற்கு பாதுகாப்பு உறை போட்டுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. 

இந்தியாவில் ஐபோன் டென் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.