டெக்

இந்தியாவில் மேலும் 54 சீன மொபைல் போன் செயலிகளுக்கு தடை?

EllusamyKarthik

சீன தேசத்தை சேர்ந்த நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்ட சுமார் 54 மொபைல்போன் செயலிகளுக்கு இந்திய அரசு தடை செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக வட்டாரங்களில் இருந்து இந்த தகவல் கிடைத்துள்ளது. தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் செயலிகள் இவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2020 முதல் இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு சீன தேச மொபைல் போன் செயலிகள் அச்சுறுத்தலாக இருப்பதாகக்கூறி, சுமார் 224 செயலிகளின் பயன்பாட்டை இந்தியா இதுவரை தடை செய்துள்ளது. இதில் டிக்-டாக், ஷேர்-இட், ஹலோ மாதிரியான பிரபல செயலிகளும் அடங்கும். 

ஸ்வீட் செல்ஃபி HD, பியூட்டி கேமரா - செல்ஃபி கேமரா, ஈக்வலைசர் & பேஸ் பூஸ்டர், கேம்கார்ட் ஃபார் சேல்ஸ் ஃபோர்ஸ் என்ட், Isoland 2: Ashes of Time Lite, விவா வீடியோ எடிட்டர், டென்சென்ட் Xriver, Onmyoji செஸ், Onmyoji அரேனா, ஆப் லாக் & டியூயல் ஸ்பேஸ் லைட் மாதிரியான செயலிகள் தற்போது தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள 54 செயலிகளில் அடங்கும். 

இதில் சில செயலிகளை ஏற்கெனவே இந்திய அரசு தடை செய்ததாகவும், இருந்தாலும் அது பயன்பாட்டில் இருந்து வரும் காரணத்தால் தற்போது மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.