Sam Altman Reuters
டெக்

"இந்தியா பயனாளி அல்ல; படைப்பாளி" - ஓபன் ஏஐ நிறுவன சி.இ.ஓ சாம் ஆல்ட்மேன் புகழாரம்.!

செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியா வெறும் பயனாளர் அல்ல, அதன் வளர்ச்சிக்குப் பங்களிக்கும் படைப்பாளி என ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.

PT WEB

சாம் ஆல்ட்மேன், ஏஐ தொழில்நுட்பம் வேலைவாய்ப்புகளை மாற்றும் என்றாலும், மனிதர்களின் படைப்பாற்றல் அழியாது என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இந்தியா ஏஐ உருவாக்கத்தில் முன்னேறி வருவதை பாராட்டிய அவர், டாடா குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் தரவு மையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

செயற்கை நுண்ணறிவுத் துறையின் உலகளாவிய அடையாளமாகத் திகழும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன், டெல்லியில் நடைபெற்ற எக்ஸ்பிரஸ் அட்டா' (Express ADDA) நிகழ்வில் பங்கேற்றுப் பேசினார். அப்போது, இந்தியா தற்போது ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் மட்டும் முன்னணியில் இல்லை, அதை உருவாக்குவதிலும் வியக்கத்தக்க வேகத்தில் வளர்ந்து வருகிறது எனப் புகழாரம் சூட்டினார்.

sam altman

ஏஐ-ஆல் வேலைவாய்ப்புகள் பறிபோகுமா? என்ற கேள்விக்குப் பதிலளித்த சாம் ஆல்ட்மேன், வேலைச் சூழலில் பெரிய மாற்றங்கள் இருக்கும் எனவும், ஆனால் மனிதர்களின் படைப்பாற்றலுக்கு ஒருபோதும் அழிவில்லை எனவும் குறிப்பிட்டார். மேலும், முன்பை விட இன்னும் ஆக்கப்பூர்வமான புதிய வேலைகள் உருவாகும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். குறிப்பாக, செவிலியர் பணி போன்ற மனித உணர்வுகளும், அரவணைப்பும் தேவைப்படும் வேலைகளை ரோபோக்களால் ஒருபோதும் ஈடு செய்ய முடியாது என்று சாம் ஆல்ட்மேன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

கால்குலேட்டர் வந்தபோது கணிதம் மாறவில்லை. அதேபோல், ஏஐ வந்தாலும் மாணவர்கள் சிந்திக்கும் முறையை மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர, கல்வி அழியாது எனவும் சாம் ஆல்ட்மேன் தெளிவுபடுத்தினார். தனது நிறுவனத்தின் சாட்ஜிபிடி (ChatGPT) ஒரு சிறந்த தொழில்நுட்ப உதவியாளராக இருக்குமே தவிர, 'எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது?' என்பது போன்ற வாழ்க்கைத் தத்துவங்களைக் கேட்க நான் அதை ஒருபோதும் நாடமாட்டேன் என்றும் சாம் ஆல்ட்மேன் நகைச்சுவையாகத் தெரிவித்தார்.

Representative image of artificial intelligence (AI)

'டாடா குழுமத்துடன்' இணைந்து ஏஐ உட்கட்டமைப்பை மேம்படுத்தப் போவதாகவும், ஸ்டார்கேட்' (Stargate) திட்டத்தின் கீழ் இந்தியாவில் பிரம்மாண்ட தரவு மையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட சாம் ஆல்ட்மேன், இந்தியா விரைவில் உலகின் மிகப்பெரிய ஏஐ சந்தையாக மாறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.