டெக்

தனிமையில் உள்ள மூத்த குடிமக்களுக்கு உதவ ரோபோ: ஹைதராபாத் ஐடி நிறுவனம் வடிவமைப்பு

EllusamyKarthik

மாறி வரும் வாழ்க்கை முறையினால் ஒரு கூட்டுக்குள் வாழ்ந்த பறவைகள் அனைத்தும், இரை தேடி, திசை மாறி பறந்துக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும் அந்த தேடல் முடிந்தவுடன் வீடு எனும் கூடை அந்த பறவைகள் அடையும். இங்கு வயதில் மூத்த பறவைகள் வீடடைந்து கிடக்க, இளம் பறவைகள் இரை தேடி செல்கின்றன. 

அந்த வகையில் தனிமையில் உள்ள மூத்த குடிமக்களுக்கு உதவும் நோக்கில் ‘ரோபோ’ ஒன்றை வடிவமைத்துள்ளது ஹைதராபாத்தை சேர்ந்த ஐடி நிறுவனமான அச்சலா (Achala) ஐடி சொல்யூஷன்ஸ். விரைவில் இந்த ரோபோவின் சேவை பொது பயன்பாட்டுக்கு வர உள்ளது.  

இந்த ரோபோக்கள் மூத்த குடிமக்களுடன் நேரம் போவதே தெரியாமல் பொழுதை பேசிக் கழிக்கவும், அவர்களை எந்நேரமும் ஆக்ட்டிவாக வைத்துக் கொள்ளவும், அவசர உதவிகள் தேவைப்படும் நேரத்தில் அடுத்தவர்களுக்கு அலார்ட் கொடுக்கவும் செய்யும் என தெரிவித்துள்ளனர் வடிவமைப்பாளர்கள். 

‘எல்ரோ’ என்ற பிராண்டின் கீழ் இந்த ரோபோக்கள் உருவாக்கப்பட உள்ளன. ரத்த அழுத்தம், சர்க்கரை, உடல் வெப்பம், ஆக்ஸிஜன் அளவு மாதிரியானவற்றை இந்த ரோபோ வழக்கமான இடைவெளியில் பரிசோதிக்கும். மருத்துவரை அணுக, அவர் பரிந்துரைக்கும் மருந்து, மாத்திரைகளை பெறவும் இந்த ரோபோ உதவுமாம். 

“மூத்த வயதினருக்கு உதவ சிறிய வடிவிலான ரோபோக்களை பயன்படுத்த உள்ளோம். இப்போதைக்கு இந்த ரோபோ ஆங்கில மொழியை புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைத்துள்ளோம். கூகுள் அசிஸ்டன்ட், அலெக்சா மாதிரியான தளங்களின் துணையோடு இதனால் உள்ளூர் மொழிகளையும் புரிந்து கொள்ள முடியும்” என தெரிவித்துள்ளார் அச்சலா ஐடி சொல்யூஷன்ஸ் நிறுவனர் ராஜேஷ் ராஜு. 

மன அழுத்தம் மற்றும் நினைவாற்றல் இழப்பு குறித்தும் இந்த ரோபோ கண்காணிக்குமாம். இதன் டெஸ்க்டாப் வெர்ஷன் கூடிய விரைவில் அறிமுகமாக உள்ளதாம். அதே போல் ஹியூமனாய்ட் ரோபோ வரும் டிசம்பரில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.