WhatsApp Scam
WhatsApp Scam PT
டெக்

WhatsApp-ல் அதிகரிக்கும் பணமோசடி அழைப்புகள்! தடுத்து நிறுத்த என்ன செய்ய வேண்டும்?

Rishan Vengai

டெக்னாலஜியின் பயன்பாடு அதிகாமகிவிட்ட இந்த நவீன உலகத்தில், அதே டெக்னாலஜியை வைத்தே அதிகமான கொள்ளை சம்பவம் நடைபெற்றுவருவது, தொடர்ந்து அதிகரித்துகொண்டு தான் இருக்கிறது. கடந்த சில வருடங்களாக, பல்வேறு வாட்ஸ்அப் பயனாளர்களிடம் இருந்து, எத்தியோப்பியா (+251), மலேசியா (+60), இந்தோனேசியா (+62), கென்யா (+254), வியட்நாம் (+84) போன்ற பல நாடுகளிலிருந்து அழைப்புகள் வருவதாகவும், பண மோசடி நடைபெறுவதாகவும் புகார் பெறப்பட்டது. இந்நிலையில் இந்த ஆன்லைன் வழியான கொள்ளை சம்பவமானது மேலும் அதிகரித்து, தற்போது வெளிநாடு வேலை வாய்ப்பு, பார்ட் டைம் வேலையில் அதிக சம்பளம், தவறான வீடியோ அழைப்புகள் போன்ற நூதன வழியில் நடைபெற்றுவருகிறது.

ஆன்லைன் மோசடி

பண பிரச்னை அதிகமாக உள்ள இந்த காலகட்டத்தில், அதிகமான வட்டி மற்றும் அதிகமான சம்பளம் என்பதையெல்லாம் நம்பி, லிங்கை ஓபன் செய்தாலே பணப்பிடித்தம், முன்பணம் கட்ட சொல்லி மோசடி என எளிதாகவே மக்கள், அவர்களது பணத்தை மோசடியாளர்களிடம் இழந்துவருகின்றனர். இதனை தடுத்து நிறுத்தும் முயற்சியில் அரசாங்கம் தொடர்ந்து வேலை செய்துவரும் நிலையில், வாடிக்கையாளர்களும் சில எளிதான வழிகள் மூலம் இந்த மோசடியில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.

மோசடிக்கு வழிவகுக்கும் 47 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் நீக்கம்!

ஆன்லைன் மோசடி குறித்து பேசியிருக்கும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், “மோசடி செய்யப் பயன்படுத்தப்படும் தொலைபேசி எண்களை முழுவதுமாக நீக்க, வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அதற்கான வேலைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும்” தெரிவித்தார். மேலும் வாட்ஸ்அப்பை போன்றே மோசடி பயனர்களின் கணக்கை நிரந்தரமாக அகற்ற, டெலிகிராம் போன்ற மற்ற தளங்களுடனும் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறினார்.

Ashwini Vaishnaw

இதுகுறித்து வாட்ஸ் அப் கூறுகையில், ஏற்கெனவே இந்த நடவடிக்கையின் பேரில், கடந்த டிசம்பரில் 4.5 மில்லியன் கணக்குகளும், ஜனவரியில் 2.9 மில்லியன் மற்றும் பிப்ரவரியில் 4.5 மில்லியன் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் " வாட்ஸ் அப் பயனர்களின் சேஃப்டி மற்றும் செக்யூரிட்டிகளை தொடர்ந்து உறுதி செய்வதற்காக, அரசாங்கத்துடன் இணைந்து தீவிரமாக செயல்பட்டுவருவதாகவும்” தெரிவித்துள்ளது.

மோசடி அழைப்புகளை தடுத்து நிறுத்த என்ன செய்யவேண்டும்?

* முதலில் தெரியாத வெளிநாட்டு அழைப்புகள் ஏதாவது வந்தால், அதற்கு பதிலளிக்காமல் இருக்க வேண்டும்.

* அதிகப்படியான சம்பளம், பம்பர் பரிசு, அதிக வட்டி ஈட்டலாம் போன்ற எந்த விதமான நிதி ஆதாரம் அளிப்பதாக வரும் செய்திகளுக்கும் பதிலளிக்க வேண்டாம். அது உங்களுக்கு விரிக்கும் வலை என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். அதன்பின்னர் அந்த எண்ணை வாட்ஸ்அப்பில் புகாரளியுங்கள்.

* ஒருவேளை அறிமுகம் இல்லாத அந்த எண், சர்வதேச எண்ணாகவோ அல்லது உள்ளூர் எண்ணாகவோ இருந்தாலும் சந்தேகம் தரக்கூடியதாக இருந்தால், வாட்ஸ் அப்பில் புகாரளித்த பிறகு பிளாக் செய்யுங்கள்.

WhatsApp Scam

* மோசடி அழைப்பு என்பது இனி வரவே கூடாது என தடுக்க நினைத்தால், இந்த முக்கியமான வழிகளை பின்பற்றுங்கள்.

- உங்கள் வாட்ஸ் அப்பில் “two-factor"அங்கீகாரத்தை ஆன் செய்து வைத்துகொள்ளுங்கள். அதற்கான வழியாக ( Open WhatsApp Settings > Tap Account > Two-step verification > Enable) என்பதை நீங்கள் உறுதிசெய்துகொண்டால், உங்கள் கணக்கில் உள்நுழையும்போது உங்கள் பாஸ்வேர்டுடன், சரிபார்ப்புக் குறியீட்டையும் உள்ளிட அனுமதி கேட்கும்.

* உங்களுக்கு போன் செய்து நல்ல சம்பளத்துடன் வேலை இருக்கிறது என்று கூறி, அதற்காக முன்பணம் கேட்டால், இணைப்பைத் துண்டித்துவிடுங்கள். எந்தவொரு உண்மையான நிறுவனமும், வேலைக்கு விண்ணப்பிப்பதற்காக பணம் கேட்காது.

* ஒருவேளை பினிசஸ் அக்கவுண்ட் என்று ஏதேனும் அழைப்பு வந்தால், பச்சை நிற டிக் வருகிறதா என்று சரிபார்க்கவும். அப்படி வந்தால், அந்த எண் WhatsApp-ல் அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்பட்ட மற்றும் சரிபார்க்கப்பட்ட வணிகத்திற்கு சொந்தமானது என்பதைக் குறிக்கும்.

whatsapp

* உங்களுடைய பிரைவேட் செட்டிங்ஸில் உங்களுடைய சுயவிவரம், புகைப்படம், ஸ்டேட்டஸ், லாஸ்ட் சீன் போன்றவற்றை தெரிந்துகொள்ள அனுமதிக்கும் இடத்தில் எவரிஒன் என்பதற்கு பதிலாக, மை காண்டாக்ட் என்று மாற்றிவைத்துக்கொள்ளுங்கள்.

* நம்மை பற்றிய தகவல் எப்படி வெளியே போகிறது என்று யோசிக்க வேண்டாம், எங்கோ எவர்மூலமோ கசியும் டேட்டாபேஸ் மூலம் தான் நம்மை பின் தொடர்வார்கள். அதனால், வாட்ஸ்அப் குரூப்களுக்கான செட்டிங்ஸிலும் சென்று, குரூப்பில் சேர்ப்பதற்கான அனுமதியில் எவரிஒன் என்பதை மாற்றி மை காண்டாக்ட்ஸ் என்று மாற்றி வையுங்கள்.