டெக்

வைஃபை காலிங் வசதியை பெறுவது எப்படி?

jagadeesh


செல்போன்களில் வைஃபை இணைப்பை பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி பிரபலமாகி வருகிறது. வைஃபை காலிங் என்றால் என்ன? அனைத்து செல்போன்களிலும் இதனை பயன்படுத்த முடியுமா என்பதை தெரிந்துகொள்ளலாம்.

நெட்வொர்க் கிடைக்கல. பேசும்போதே கால் கட்டாகிடுச்சி என்று அடிக்கடி நாம் புலம்புவதுண்டு. அதற்கெல்லாம் தீர்வாக வந்துவிட்டது வைஃபை காலிங். அதாவது வீடு, அலுவலகம், அல்லது பொது இடங்களிலோ வைஃபை இணைப்பை பயன்படுத்தி நாம் குரல் வழி அழைப்புகளை மேற்கொள்ள முடியும். தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் நாளுக்குள் நாள் அப்டேட் ஆகி வருகின்றன. அதன் அடுத்தக் கட்டம்தான் வைஃபை இணைப்பை பயன்படுத்தி வீடியோ அல்லது ஆடியோ கால் மேற்கொள்வது. தற்போதைக்கு ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வைஃபை காலிங் வசதியை விரிவுபடுத்தியுள்ளன.

வைஃபை காலிங் வசதி என்பது சமகால தேவையாக மாறிவருகிறது. இதற்கு வாடிக்கையாளர்களிடமும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த வைஃபை காலிங் வசதி யாருக்கெல்லாம் கிடைக்கும்? அதனை எப்படி பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்வது அவசியம். வைஃபை இணைப்பு மூலம் ஒருவரை தொடர்பு கொள்வதற்கென தனியாக செயலி எதுவும் தேவையில்லை என்பதே இதன் முக்கியமான அம்சம். ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள் அனைவரும் இலவசமாக வைஃபை காலிங் வசதியை பயன்படுத்தலாம். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எந்த செல்போன் மாடல்களில் வைஃபை காலிங் வசதியை பயன்படுத்த முடியும் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளன. அந்த பட்டியலில் உங்கள் போனும் இடம்பெற்றிருந்தால் வைஃபை காலிங் செய்யலாம்.

வைஃபை காலிங் செய்யக்கூடிய மாடல்களில் உங்கள் போனும் இருந்தால் அதற்கேற்ப செட்டிங்கில் VOLTE அல்லது VOWIFI என்ற பிரிவில் மாற்றம் செய்ய வேண்டும். செல்போன் இயங்குதளத்தை அப்டேட் செய்த பின் வைஃபை காலிங் வசதியை பயன்படுத்த தொடங்குவது சிறந்தது என்கின்றன தொலைதொடர்பு நிறுவனங்கள். வைஃபை காலிங் வசதியே அடுத்த சில ஆண்டுகளில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் முறையாக மாறப்போகிறது. இதற்கு காரணம், பிரத்யேக செயலி ஏதுமில்லாமல் வைஃபை இணைப்பு வசதியை மட்டுமே கொண்டு அழைப்புகளை ஏற்படுத்தலாம். துல்லியமான,தெளிவான மற்றும் தடையற்ற குரல்வழி அழைப்புகளை மேற்கொள்ள முடியும். கால் டிராப் போன்ற பிரச்னைகள் இதில் ஏற்படாது. செயலிகள் மூலம் ஏற்படுத்தும் அழைப்புகளுடன் ஒப்பிடுகையில் குறைவான பேட்டரியே செலவாகும் என சொல்லப்படுகிறது. உங்கள் போனில் நெட்வொர்க் இல்லை என்றாலும் நீங்கள் இருக்கும் இடத்தில் முறையான வைஃபை இணைப்பு இருந்தாலே போதுமானது. இந்த முறை நாம் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளும் முறையிலும், தொலைத்தொடர்பு நிறுவன சேவைகளை பயன்படுத்தும் முறையிலும் மாற்றத்தை கொண்டுவரப்போகிறது.