டெக்

“இனி 5 பேருக்கு மட்டுமே பார்வேர்ட் செய்ய முடியும்” - வாட்ஸ்அப் அறிவிப்பு

webteam

ஒரு செய்தியை 5 பேருக்கு மட்டுமே பார்வேர்ட் செய்ய முடியும் என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

வாட்ஸ்அப் மூலம் நாள்தோறும் தவறான தகவல்களைக் கொண்ட செய்திகள் பரப்பப்படுவதாகவும், அவதூறுகள் பகிரப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது. அத்துடன் பல மாதங்களுக்கு காணாமல் போனவர்களை தற்போது காணவில்லை என அனுப்புவது, எப்போதே உடல்நிலை பாதிக்கப்பட்ட ஒருவரது புகைப்படத்தை பகிர்ந்து இவருக்கு உடனே ரத்தம் வேண்டும் எனக் கூறுவது உள்ளிட்ட தகவல்களும் வாட்ஸ் அப்பில் தொடர்ந்து பகிரப்பட்டு வந்தன. 

அத்துடன் அரசியல் ரீதியாகவும், தனிநபர்கள் ரீதியாகவும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வந்தன. குறிப்பாக உடல்நிலை சரியின்றி இருக்கும் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வருவதற்கு முன்பே, அவர் இறந்துவிட்டார் என்ற போலியான தகவல்களும் பகிரப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. இதற்கிடையே இந்த மெசெஜை உடனே 15 பேருக்கு ஷேர் செய்தால் நல்லது நடக்கும், தமிழனா இருந்தா ஷேர் செய் போன்ற காமெடி பார்வேர்ட் செய்திகளும் வாட்ஸ்அப்பை சுற்றித்திரிகின்றன.

இவ்வாறு வாட்ஸ்அப் மூலம் பல போலி செய்திகள் பரப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, கடந்த ஜூலையில் உலகளவில் ஒரே நேரத்தில் 20 பேர்களுக்கு மட்டுமே ஒரு‌ குறிப்பிட்ட செய்தியை பகிர முடியும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்தது. பின்னர் இந்தியாவில் இந்த எண்ணிக்கையை வெறும் ஐந்தாக குறைத்தது வாட்ஸ் அப் நிறுவனம். தற்போது இந்தியாவை போன்றே தற்போது பிற நாடுகளிலும் வாட்ஸ் அப் செய்தியை பகிரும் வாய்ப்பு ஐந்தாக குறைக்கப்பட்டுள்ளது.