டெக்

வெற்றிகரமாக ஏவப்பட்டது அதிக கனம் கொண்ட ஜிசாட் 11 செயற்கைக்கோள்..!

Rasus

இந்தியாவின் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட் 11 பிரென்ச் கயானாவிலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஏரியான் ராக்கெட் மூலம் ஏவப்பட்ட ஜிசாட் 11 இந்தியா இதுவரை செலுத்தியுள்ள தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்களிலேயே அதிக கனமானது.

5854 கிலோ எடை கொண்ட ஜிசாட் 11 செயற்கைக்கோள் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் தொலைதூர கிராமங்களுக்கு பிராட்பேன்ட் இணைய சேவை அளிக்க உதவும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோவின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். ஜிசாட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டவுடன் அதன் கட்டுபாடு கர்நாடகாவில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு மாற்றப்பட்டது.

சோதனைகளுக்கு பிறகு செயற்கைக்கோள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 21 நாட்களில் மூன்று செயற்கைக் கோள்களையும், இரண்டு ராக்கெட்டுகளையும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 6A செயற்கைகோள் கண்காணிப்பு வளையத்தில் இருந்து பிரிந்து போனது. இதனைஅடுத்து, ஜூன் மாதமே விண்ணில் ஏவப்பட இருந்த ஜிசாட் 11 செயற்கைகோளை பிரெஞ்சு கயானாவில் இருந்து திரும்பப் பெற்ற இஸ்ரோ விஞ்ஞானிகள், அதில் பொருத்தப்பட்டிருந்த அனைத்து கருவிகளையும் மீண்டும் ஒருமுறை சரிபார்த்தனர். இந்நிலையில் ஜிசாட் 11 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.