எலான் மஸ்க் எக்ஸ் தளம்
டெக்

க்ரோக் AI | இந்தியில் ஆபாச பதில்.. எமோஜியுடன் பதிலளித்த மஸ்க்!

சமீபகாலமாக இந்திய பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ‘GROK’ சாட்பாட் அளிக்கும் பதில்களால் நாட்டில் சர்ச்சை புயல் வீசத் தொடங்கியுள்ளது.

Prakash J

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. இதனால் பல நிறுவனங்களும் போட்டிபோட்டுக் கொண்டு சாட்ஜிபிடியை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்கின்றன. அந்த வகையில், உலக பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க்கின் எக்ஸ் தளமும் க்ரோக் (Grok) சாட்பாட்டை செயல்படுத்தியுள்ளது. இதன்மூலம் பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அது பதில் அளித்து வருகிறது. ஆனால், சமீபகாலமாக இந்திய பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ‘க்ரோக்’ சாட்பாட் அளிக்கும் பதில்களால் நாட்டில் சர்ச்சை புயல் வீசத் தொடங்கியுள்ளது.

அண்மையில் பயனர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இந்தியில் பதிலளித்த க்ரோக், வரம்பு மீறி கொச்சையான சொற்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, ‘க்ரோக்’ சாட்பாட் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்ட பல கேள்விகளுக்கும் அது பதிலளித்திருந்தது. இதனால் இந்திய தகவல்தொடர்பு அமைச்சகம், க்ரோக் ஏஐ-யை நிர்வகிக்கும் எக்ஸ் தளத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. சமூக ஊடக தளத்தின் செயல்பாட்டைப் புரிந்துகொள்வதற்கும் மதிப்பிடுவதற்கும் அமைச்சகம் அதனுடன் கலந்துரையாடி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, ’எலான் மஸ்க்கின் க்ரோக் இந்தியாவில் ஏன் புயலைத் தூண்டுகிறது’ என்ற தலைப்பில் பிபிசி கட்டுரையைப் பகிர்ந்த மஸ்க், சிரிக்கும் எமோஜியுடன் பதிலளித்திருந்தார். அந்தப் பதிவு விரைவாக வைரலானதுடன், சில மணி நேரங்களுக்குள் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றிருப்பதுடன் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.