Gold Monetisation திட்டத்தின் இரண்டு அம்சங்களை நிறுத்த முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் வங்கிகள் குறுகிய கால தங்க வைப்புத் திட்டங்களை தொடரலாம் எனவும் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சாமானியர்களுக்கு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
இந்த திட்டம் செப்டம்பர் 15, 2015 அன்று அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. குடும்பங்கள் மற்றும் நிறுவனங்கள் வைத்திருக்கும் தங்கத்தை நாட்டிற்குள் அதிகளவில் வைத்திருக்க முடியும். மக்களிடம் இருக்கும் தங்கத்திற்கு இதன்மூலம் வருமானமும் கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ், அரசாங்கம் ஏற்கனவே நவம்பர் 2024 வரை தோராயமாக 31,164 கிலோகிராம் தங்கத்தை சேகரித்துள்ளது.
Gold Monetisation திட்டம் 3 அம்சங்களை கொண்டது. ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை இருக்க கூடிய குறுகிய கால திட்டம், ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை இருக்கும் நடுத்தர திட்டம் மற்றும் நீண்ட கால அரசாங்க வைப்புத்தொகை திட்டமாக 12 முதல் 15 ஆண்டுகள் வரை இருக்கும்.
தற்போது நடுத்தர மற்றும் நீண்ட கால வைப்புத்தொகை திட்டம் நிறுத்தப்பட்டது.
மார்ச் 26, 2025 க்குப் பிறகு, நடுத்தர கால மற்றும் நீண்ட கால திட்டத்தில் புதிய வைப்புத்தொகைகள் ஏற்றுக்கொள்ளப்படாது. இருப்பினும், இந்தத் திட்டங்களில் ஏற்கனவே உள்ள வைப்புத்தொகைகள் அவற்றின் முதிர்வு வரை தொடரும். இனிவரக்கூடிய நாட்களில் ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை இருக்கும் குறுகிய கால வைப்புத்தொகைகள் மட்டுமே கிடைக்கும்.
அதுமட்டுமின்றி, வங்கிகளால் வழங்கப்படும் குறுகிய கால வங்கி வைப்புத்தொகை (short-term bank deposit ) வசதி, வங்கிகளின் விருப்பப்படி தொடரும். வணிக நம்பகத்தன்மையை மதிப்பிட்ட பிறகு, STBD-ஐ தொடர வங்கிகள் முடிவு செய்யலாம். இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் விரிவான வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும்.
இதன் காரணமாக நீண்ட கால திட்டத்தை பயன்படுத்தி முதலீடு செய்துவந்தவர்கள் அதற்கு மாற்றாக வேறு திட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. வங்கிகள் நீண்டகாலமாக தங்கத்தை வைத்திருந்தால் அதற்கு வட்டி கொடுக்க வேண்டும். எனவே பணச்சுமை அதிகரிக்கும். இதனை குறைப்பதற்காகவும், பொருளாதார சூழ்நிலையை கருத்தில்கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தங்கத்தில் முதலீடு செய்யவேண்டும் என நினைக்கும் முதலீட்டாளர்கள் இந்த திட்டத்திற்கு பதிலாக மாற்று திட்டத்தை பயன்படுத்தலாம்.