டெக்

இந்து பெண்களை குறிவைக்கும் செயலி, பேஸ்புக் பக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை: மத்திய அமைச்சர்

Veeramani

இந்து பெண்களை குறிவைக்கும் செயலி மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதியளித்துள்ளார்.

'புல்லி பாய்' செயலி மற்றும் இஸ்லாம் பெண்கள் பற்றிய சர்ச்சைக்குப் பிறகு சில ஃபேஸ்புக் பக்கங்களும், டெலிகிராம் சேனலும் இந்துப் பெண்களைக் குறிவைத்ததாகக் கூறப்படும் செய்திகள் வெளிவந்தது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதியளித்துள்ளார்.

டெலிகிராம் சேனல் தொடர்பாக ட்விட்டரில் எழுந்த புகாருக்கு பதிலளித்த வைஷ்ணவ், “ குறிப்பிட்ட அந்த சேனல் முடக்கப்பட்டது. மேல் நடவடிக்கைக்காக மாநிலங்களின் காவல்துறை அதிகாரிகளுடன் மத்திய அரசு ஒருங்கிணைந்து செயல்படுகிறது" எனத் தெரிவித்தார்.

இந்து பெண்களை குறிவைத்து ஃபேஸ்புக்கில் பல தவறான பக்கங்களும், குழுக்களும் வெளிவந்துள்ளன. இது தொடர்பான புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், மெட்டா நிறுவன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 'புல்லி பாய்' என்ற செயலியில் 100 இஸ்லாம் பெண்களின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதாக டெல்லி மற்றும் மும்பை காவல்துறையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து ‘SULLI DEAL’ என்ற மொபைல் செயலியை உருவாக்கியவர்கள் மீது FIR பதிவு செய்யப்பட்டது . இந்த செயலியானது பெண்களின் அனுமதியின்றி அவர்களின் புகைப்படங்களை பதிவேற்றுவதாகவும், திருடப்பட்ட புகைப்படங்களை ஏலம் விடும் ஹோஸ்டிங் தளமான ‘GITHUB’ ஐப் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.