செயற்கை நுண்ணறிவு ஆபத்தானது, மனிதர்களின் வேலையைப் பறிக்கக் கூடியது, தன்னிச்சையாக செயல்படுகிறது என்ற புகார்கள் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் பயனர்களின் பயன்பாட்டுக்கு வந்த நாள் தொடங்கி தற்போது வரை பல துறைகளில் அது மனிதர்களின் வேலையை எளிதாக்கியிருக்கிறது. ஆராய்ச்சியில் தொடங்கி, மருத்துவம், கல்வி, விவசாயம் என பல விஷயங்களில் ஏஐ புரட்சி செய்து வருகிறது. இப்படி உலகம் முழுவதும் ஏஐ அலை வீசி வரும் நிலையில், இந்தியாவில் காவல் நிலையம் ஒன்று, ஏஐ காவல் நிலையமாக மாறவுள்ளது.
ஏஐ காவல் நிலையம் என்றவுடன் அதனை அதிகாரிகள் இல்லாத செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மட்டுமே இருக்கக் கூடிய காவல் நிலையம் என்ற அர்த்தத்தில் புரிந்துகொள்ளக் கூடாது. இந்த காவல் நிலையத்தில், அதிகாரிகளின் பணிகளை எளிதாக்க அதிகாரப்பூர்வ அனுமதியோடு, முழுவதும் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட இருக்கிறது.
அதன்படி புகாரளிப்பதில் தொடங்கி, காவல் நிலைய டேடாவை தேடி எடுப்பது வரை ஏஐ பயன்படுத்தப்பட இருக்கிறது. பாதிக்கப்பட்ட நபர்கள் குறிப்பிட்ட சில 10 மொழிகளில் இனி தங்கள் புகாரை பதிவு செய்து கொள்ளலாம். அப்படி செய்யும் புகாரை ஏஐ மூலம் உள்ளூர் மொழியில் மொழிபெயர்த்து, எந்த அதிகாரிக்கு அந்த புகார் சென்று சேர வேண்டுமோ, அதனை ஏஐ அந்த அதிகாரிக்கு சென்று சேர்க்கும் எனச் சொல்லப்படுகிறது.
இதுமட்டுமின்றி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள், குற்ற வரலாறு மற்றும் அதன் பின்னணி, போக்குவரத்து நிலவரங்கள் என அனைத்தும் ஏஐ டேட்டாவாக பதிவேற்றப்படும் என்பதால், அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்வது, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வது, வழக்கின் நாட்குறிப்பு மற்றும் விசாரணை, அறிக்கை தயாரிப்பது என அனைத்தையும் இனி ஏஐ மேற்கொள்ளும் எனச் சொல்லப்படுகிறது.
இப்படி முழுவதும் ஏஐ உதவியுடன் இயங்க இருக்கும் இந்த காவல் நிலையமானது தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா பகுதியில்தான் இயங்க இருக்கிறது. இதற்கான வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், காவல் ஆணையர் வி.சி.சஜ்ஜனார் பணிகளை ஆய்வு செய்திருக்கிறார். இதுதொடர்பாக அதிகாரிகளுக்கும் பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறது. காவல் நிலையத்தின் அனைத்து சேவைகளும் அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்படுவதால் மக்களுக்கான சேவைகள், தேவைகள், புகார்கள் எளிதில் நிறைவேற்றப்படும் என சொல்லப்படுகிறது.