மாதிரி படம் புதியதலைமுறை
டெக்

பிப்ரவரி 28 முதல் ஏழு கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் காட்சியளிக்கும் வானியல் அரிய நிகழ்வு

கிரக அணிவகுப்பு பிப்ரவரி 28 அன்று தொடங்கினாலும், இந்தியாவில் உள்ள பார்வையாளர்கள் மார்ச் 3 ஆம் தேதி முதல் தெளிவாக பார்க்க முடியும் என கூறப்படுகிறது.

PT WEB

செய்தியாளர் பால வெற்றிவேல்

ஏழு கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் காட்சியளிக்கும் வானில் அரிய நிகழ்வை பிப்ரவரி 28ஆம் தேதி முதல் பார்க்க முடியும் என நாசா தெரிவித்துள்ளது. இதேபோன்று ஏழு கிரக அணிவகுப்பு மீண்டும் 2040 இல் தான் தோன்றும் என கூறப்படுகிறது.

சூரிய குடும்பத்தில் உள்ள ஒன்பது கோள்களும் சூரியனை மையமாக வைத்து நீள் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றது. சூரியனை மையமாக வைத்து கிரகங்கள் சுற்றும் போது பூமியில் இருந்து நாம் பார்க்கும் பார்வை கோணம் அவ்வப்போது ஒரே திரையில் காட்சியளிக்கும். அப்படி புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய 7 கிரகங்கள் அணிவகுப்பு பிப்ரவரி 28ம் தேதி தொடங்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. "கிரக அணிவகுப்பு" என்பது பல கிரகங்கள் ஒரே நேரத்தில் சூரியனின் ஒரு பக்கத்தில் கூடும்போது ஏற்படும் நிகழ்வாகும். கிரகங்கள் நேர்கோட்டில் தோன்றாவிட்டாலும், சூரியன் வானத்தில் பயணிக்கும் வளைந்த பாதையான கிரகணத்துடன் அவை பூமியிலிருந்து பார்க்கும் நமக்கு காட்சியளிக்கும்.

கிரக அணிவகுப்பு பிப்ரவரி 28 அன்று தொடங்கினாலும், இந்தியாவில் உள்ள பார்வையாளர்கள் மார்ச் 3 ஆம் தேதி முதல் தெளிவாக பார்க்க முடியும் என கூறப்படுகிறது.

புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி உள்ளிட்ட கிரகங்களை வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்றும் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கிரகங்களை பைனாக்குலர் மற்றும் தொலைநோக்கி உதவியுடன் பார்க்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. தற்போது ஸ்மார்ட்போன்களில் வானியல் தொடர்பாக நிறைய செயலிகள் வந்துவிட்ட நிலையில் அதன்மூலம் கிரகங்களின் நிலைகளை ஆர்வலர்கள் இன்றியே தெரிந்து கொள்ள முடியும் என கூறப்படுகிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு விண்வெளி ஆர்வலர் கழகம் உள்ளிட்டவை இந்த அரிய நிகழ்வை காண்பதற்காக தொலைநோக்கி மூலம் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டு இருக்கிறது.

மார்ச் மாதம் முதல் இரண்டு வாரங்களில் இந்தியாவில் இருந்து இந்த நிகழ்வை பார்க்கலாம் என கூறும் அறிவியல் ஆர்வலர்கள், இதேபோன்று 7 கிரக அணிவகுப்பு 2040ல் தான் பார்க்க முடியும் என தெரிவிக்கிறார்கள். இதனால் அறிவியல் ஆர்வலர்கள் அறிவியல் ஆர்வம் கொண்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் இந்த நிகழ்வை காண்பதற்கு ஆர்வம் காட்டுவார்கள் என நம்பலாம். பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று ஏழு கிரக அணிவகுப்பு நிகழ்ச்சியை பார்க்கலாம் என ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.