IBM, AI
IBM, AI Twitter
டெக்

7,800 வேலைவாய்ப்புகள் காலி! AI மூலம் நிரப்பும் அமெரிக்க நிறுவனம்! இது தொடருமா? விளைவு என்ன?

Rishan Vengai

செயற்கை நுண்ணறிவு (AI) தயாரிப்புகளானது முன்பெல்லாம் சில முக்கியமான பங்களிப்புகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டும், அதற்காகவே அவைகள் உருவாக்கப்பட்டும் வந்தன. ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சி வளர்ந்திருக்கும் இந்த காலகட்டத்தில், செயற்கை நுண்ணறிவானது அன்றாட பயன்பாட்டிற்கே அதிகம் பயன்படுத்தும் சூழ்நிலையை எட்டியுள்ளது. அதன் காரணமாகவே இயல்பாக எழுந்து சென்று செய்ய வேண்டிய சிறுசிறு வேலைகளை கூட, உட்கார்ந்த இடத்திலிருந்தே இயக்க முடியும் என்றவரையிலான தொழில்நுட்ப பொருட்கள் தற்போது அதிகளவில் சந்தைகளில் உருவாகியுள்ளன.

செயற்கை நுண்ணறிவுத்துறையில் புது புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் AI!

தற்போது ஏற்பட்டிருக்கும் செயற்கை நுண்ணறவின் அதிதீவிர வளர்ச்சியானது மனிதகுலத்திற்கான ஆபத்தாக மாறிவிடுமோ என்ற அச்சம் அதிகளவில் இருந்துகொண்டே தான் வருகிறது. அந்த அச்சத்திற்கெல்லாம் பெரிய பிள்ளையார் சுழி போட்டது, Open AI-ன் தயாரிப்பான ChatGPT தான். இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது, மனிதர்களின் எண்ண ஓட்டங்களை கூட புரிந்துகொள்ளுமளவு உருவாக்கப்பட்டுள்ளது.

AI

சக மனிதரை போல உரையாடுவது, எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்வது, கோடிங் செய்வது, கட்டுரை எழுதுவது, கடிதம் எழுதுவது என சர்வ வேலைகளையும் சாட் ஜிபிடி உடனடியாக செய்து முடித்துவிடுகிறது. இந்நிலையில், இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கல்வி, தொழில்முறை, நேரம் மற்றும் உழைப்பை குறைக்கும் வேலைகள் என அனைத்திலும் செயல்முறைவடிவில் பயன்படுத்தி வரும் தொழில் நிறுவனங்கள், அதில் சோதனைமுறையில் வெற்றியை கண்டுள்ளனர்.

ஆதரவு, எதிர்ப்பு என வலுத்துவரும் நிலையில், தன்னை நிரூபித்து வரும் AI!

பலதரப்பினர் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடிய அடுத்த கட்ட நகர்வு என்று ஏகோமித்த வரவேற்பை கொடுத்து வருகின்றனர். ஆனால் சிலதரப்பினர், இதற்கு பிறகான AI தயாரிப்புகள் என்பது, மனிதனை அழிவின் எந்த இடத்திற்கும் அழைத்து செல்லும் என்றும், இதற்கு இடைக்கால தடைவிதிக்கவேண்டும் என்று கூட விவாதங்களை வைத்து வருகின்றன.

AI

இதற்கும் ஒரு படி மேலாக, AI தயாரிப்புகள் பற்றி விவரம் தெரிந்த சமூக ஆர்வலர்கள், தனிமனித சுதந்திரம், வேலைவாய்ப்பு, மனிதகுல பாதுகாப்பு முதலியவற்றை செயற்கை நுண்ணறிவு தயாரிப்புகள் பாதிக்கும் என்றும், சிலர் போர் ஏற்படுவதற்கான சூழலை கூட இவை பிற்காலத்தில் ஏற்படுத்தும் என்றும் எச்சரித்து வருகின்றனர். ஆனாலும், மக்களிடம் பெரிய வரவேற்பை தொடர்ச்சியாக பெற்றுவருகிறது, AI தொழில்நுட்பமான ChatGPT.

AI பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தியை பெருக்க பெருநிறுவனங்கள் திட்டம்!

Open AI தயாரிப்பான ChatGPT, மைக்ரோசாப்டின் Bing Chat, கூகுளின் Bard போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, உலகெங்கிலும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்நிலையில் இந்த அதிதீவிர AI வளர்ச்சியினை, உலகளவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமில்லாமல், இந்தியாவில் உள்ள சில நிறுவனங்கள் கூட பயன்படுத்த ஆரம்பித்துள்ளன.

AI

AI சாட்போட்கள் புரிந்து கொள்ளக்கூடிய கட்டளைகள் மூலம், அலுவலக பணிகளை முடிக்கக்கூடிய வேலையாட்களை பணியமர்த்தும் முயற்சியை மேற்கொண்டுள்ளன. உண்மையில், பெங்களூரு நிறுவனம் ஒன்று உற்பத்தித்திறன் அதிகரித்ததைக் கண்டு, ஊழியர்களுக்கு ChatGPT உடன் கூடிய சந்தாக்களை வழங்க முடிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து பல முன்னணி நிறுவனங்கள், AI தொழில்நுட்பத்தை ஒரு லாபகரமான ஒன்றாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளன. மனித வளத்தை குறைத்து செயற்கை நுண்ணறிவு மூலம் அதிக உற்பத்தி மற்றும் லாபத்தை ஈட்டும் முயற்சியில் இறங்கியுள்ளன.

சுமார் 7,800 வேலைவாய்ப்புகளை AI மூலம் நிரப்பும் அமெரிக்காவின் IBM!

அமெரிக்காவின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான IBM,அடுத்த 5 ஆண்டுகளில் 7,800 வேலைவாய்ப்புகளை AI மூலம் நிரப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

IBM

Bloomberg அறிக்கையின்படி, IBM நிறுவன சிஇஒ-வான அரவிந்த் கிருஷ்ணா, “அடுத்த ஐந்தாண்டு காலத்தில் 30 சதவீதம் அலுவலக வேலைகளை, AI மற்றும் ஆட்டோமேஷனால் மாற்றமுடியும் என்பதை என்னால் பார்க்கமுடிகிறது. IBM-ல் சுமார் 2,60,000 தொழிலாளர்கள் உள்ளனர். வரும் ஆண்டுகளில் அதில் கிட்டத்தட்ட 7,800 வேலைகள் AI மூலம் மாற்றப்படலாம்” என்று தெரிவித்துள்ளார்.

IBM

அதுமட்டுமல்லாமல் குறைந்த வளர்ச்சி வணிகங்களை நிறுத்திவிட்டு, அதன் வானிலை அலகு விற்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, IBM-ன் தலைமை நிதி அதிகாரி ஜேம்ஸ் கவனாக் கூறுகையில், இந்த புதிய உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனுக்கான மாற்றம் என்பது, 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள், ஒரு ஆண்டுக்கு 2 பில்லியன் அளவு லாபத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.