இந்தியப் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், புரொஃபைல் புகைப்படத் திருட்டைக் கண்டுபிடிக்கவும் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது ஃபேஸ்புக்.
ஃபேஸ்புக்கின் இந்த புதிய அம்சங்களின் மூலம், சமூகவலைதளத்தில் நண்பர் அல்லாதவர்கள் மற்றவர்களின் புரொஃபைல் படங்களைப் பயன்படுத்தவோ, பகிரவோ முடியாது.
இதுதொடர்பாக ஃபேஸ்புக் தயாரிப்பு மேலாளர் ஆரத்தி சோமன் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவில் ஃபேஸ்புக் மேற்கொண்ட ஆராய்ச்சியில், தங்களது படங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுவிடுமோ என்கிற பயத்தில் பலரும் ப்ரொஃபைலில் தங்களின் முகம் காட்ட விரும்புவதில்லை. இதனால் ஃபேஸ்புக் சில புதிய அம்சங்களை இந்தியப் பெண்களுக்கு ஏற்ற வகையில் அமைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த புதிய அம்சங்களின் மூலம், நண்பர் அல்லாத மற்றவர்கள் நம் புரொஃபைல் படங்களைப் பதிவிறக்கம் செய்ய முடியாது. அதைப் பகிரவோ மற்றவர்களுக்கு அனுப்பவோ முடியாது. ஃபேஸ்புக் நண்பர்களாக இல்லாதவர்கள், உங்களின் புரொஃபைல் படங்களோடு தன்னையோ, மற்றவர்களையோ டேக் செய்துகொள்ள முடியாது. ஃபேஸ்புக் புரொஃபைல் படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது. ப்ரொஃபைல் படத்தைச் சுற்றிலும் பாதுகாப்புக் காரணங்களுக்காக நீல பார்டர் மற்றும் ஒரு வளையம் தோன்றும் என்று கூறப்பட்டுள்ளது.