டெக்

டிக் டாக் இடத்தை நிரப்ப களமிறங்கும் ஃபேஸ்புக்: தயாராகிறது ’கொலேப்’ செயலி!

webteam

டிக் டாக் இடத்தை நிரப்ப கொலேப் (Collab) என்ற செயலியை களத்தில் இறக்கியுள்ளது ஃபேஸ்புக் . அந்த செயலியை மேம்படுத்தும் வேலையிலும் ஃபேஸ்புக் தீவிரமாக களமிறங்கியுள்ளது.

இந்தியாவில் கொடிகட்டிப்பறந்த ஒரு செயலி டிக்டாக். டிக் டாக் செயலியால் பிரபலமாகி சினிமாத்துறையில் நுழைந்தவர்களும் உண்டு. அதே டிக் டாக் வீடியோவுக்காக முயற்சி செய்து கவனக்குறைவால் உயிரை விட்டவர்கள் இங்குண்டு. இப்படி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளான டிக் டாக்கை மத்திய அரசு தடை செய்தது. சீன செயலிகளின் ஒரு பட்டியலையே மத்திய அரசு நீக்கியபோது அடிவாங்கியது டிக் டாக். அதற்குபின் டிக்டாக் இடத்தை நிரப்ப பல நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. குறிப்பாக முன்னணி சமூக வலைதளமான ஃபேஸ்புக் டிக்டாக் இடத்தை பிடித்துவிட வேண்டுமென தீவிரமாக வேலை செய்து வருகிறது. தன்னுடைய நிறுவனமான இன்ஸ்டாவில் ரீல்ஸ் அம்சத்தை அறிமுகப்படுத்தியது.

இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டதால் இந்த அம்சம் பலரின் வரவேற்பைப் பெறும் என இன்ஸ்டா நம்பியது. அதன்படியே, குறுகிய வீடியோக்களை பதிவேற்ற டிக்டாக்கிற்கு பதிலாக இந்த தளத்தை பலரும் ஏற்றுக்கொண்டனர். இதில் ஆடியோவுடன் 15 விநாடி வீடியோக்களை உருவாக்க முடியும். இதை இன்ஸ்டாகிராமின் பிரத்யேக பிரிவில் காணலாம். ஆனால் டிக்டாக் அளவுக்கு ரீல்ஸ், ரீச் ஆகவில்லை. ஆனாலும் ரீல்ஸில் அடுத்தடுத்த அப்டேட்டை கொண்டு வர இன்ஸ்டா திட்டமிட்டே செயல்படுகிறது. இதற்கிடையே Collab என்ற செயலியை களத்தில் இறக்கியுள்ளது ஃபேஸ்புக் . அந்த செயலியை மேம்படுத்தும் வேலையிலும் ஃபேஸ்புக் தீவிரமாக இறங்கியுள்ளது.

தற்போது அமெரிக்காவில் iOS பயனாளர்களின் பீட்டா வெர்ஷனுக்கு மட்டுமே இந்த செயலியை அறிமுகம் செய்துள்ளது ஃபேஸ்புக். 2021ம் ஆண்டு மே மாதம் இந்த செயலியை ஃபேஸ்புக் மேலும் அப்டேட் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Collab செயலியும், ரீல்ஸ் செயலியைப் போல 15 நொடிகள் கொண்ட வீடியோவை உருவாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.