டெக்

முடங்கிய இ-பாஸ் பதிவு தளம் மாலைக்குள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் தகவல்

நிவேதா ஜெகராஜா

கொரோனா தளர்வுகளால், 60 லட்சம் பேர் ஒரே நேரத்தில் பதிவு செய்ய வந்ததால், இ-பதிவு தளம் முடங்கியுள்ளதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். இன்று மாலைக்குள் தமிழக அரசின் இ-பதிவு இணையதளம் மீண்டும் பயன்பாட்டுக்கு வருமென அவர் கூறியிருக்கிறார்.

சுய தொழில் செய்வோர் ஒரேநேரத்தில் விண்ணப்பித்து வருவதால், இ-பதிவு இணையதளம் முடங்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலுக்கு வந்துள்ளது. அந்த தளர்வில் மளிகை கடை, காய்கறி கடை, இறைச்சி கடைகள் இயங்கலாம் என்றும் மின் பணியாளர்கள், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர்கள், தச்சர் போன்ற சுயதொழில் செய்யும் பலரும் தங்கள் பணிகளை செய்யலாம் என்ரும் கூறப்பட்டுள்ளது. இணையப் பதிவுடன் பணிபுரிய அனுமதி தரப்பட்டிருந்தது. சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில், சுய தொழில் செய்வோருக்கு இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஒரேநேரத்தில் அனைத்து இடங்களிலிருந்தும் ஒரே நேரத்தில் அனைவரும் இ-பதிவுக்கு முயன்றுள்ளனர். இதனால் இணையதளம் முடங்கியுள்ளது. விரைந்து இணைய சேவையை சரிசெய்யும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. ஆகவே இணையதளம் மாலைக்குள் மீண்டும் பயன்பாட்டுக்கு வருமென அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியிருக்கிறார்.