டெக்

மின்னணு முறையில் போக்குவரத்து விதிமீறல் கண்காணிப்பு: மத்திய அரசு அறிவுறுத்தல்

Veeramani

வாகனங்களை மின்னணு முறையில் கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மின்னணு கண்காணிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு அமலாக்கம் தொடர்பான விதிகளை மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் மின்னணு முறையில் சாலை போக்குவரத்தை கண்காணிப்பது, விதிகளை மீறுவோருக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிக்கும் முறையை அமல்படுத்துவது ஆகியவற்றை குறிக்கின்றன.

மின்னணு அமலாக்க கருவிகளான வேகத்தை கண்காணிக்கும் கேமரா, சிசிடிவி கேமரா, நம்பர் பிளேட்டை அடையாளம் காணும் தானியங்கி கருவி, உள்ளிட்ட தொழில்நுட்ப கருவிகள், 10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகம் உள்ள 132 நகரங்களில் அமைக்கப்படுவதை அந்தந்த மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, தூத்துக்குடியில் மின்னணு முறையில் கண்காணிப்பு மற்றும் போக்குவரத்து அபராதம் ஆகியவை விதிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் போக்குவரத்து போலீசார் விதிமுறைகளை மீறுவோரை நிறுத்தி அபராதம் விதிக்கும் தற்போதைய நடைமுறை படிப்படியாக குறைந்து, போக்குவரத்து நெரிசல் மற்றும் ஊழல் போன்ற தாக்கங்களை தவிர்க்க முடியும்.