power from urine
power from urine pt web
டெக்

’வாவ்வ்..’ சிறுநீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் மாதிரி அமைப்பு- ஐஐடி மாணவர்களின் அசத்தல் முயற்சி

PT WEB

சிறுநீரில் இருந்து மின்சாரம் தயாரிக்க முதல்கட்ட ஆய்வில் ஈடுபட்டுள்ள சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவர்கள், சிறுநீரை மறுசுழற்சி செய்து தண்ணீராக பயன்படுத்துவதன் மூலம் வெப்பமயமாதலை குறைக்கமுடியும் என்றும் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் பொது கழிப்பறை மேலாண்மை என்பது நடைமுறையில் சிக்கலானதாக இருக்கிறது. பொது இடங்களில் கழிப்பறையை பராமரிப்பதும் பயன்படுத்துவதும் சிரமமாக இருக்கும் நிலையில் சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவர்கள், இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் சிறுநீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் புதிய அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

இதன் மூலம் சிறுநீரை மறுசுழற்சி செய்து தண்ணீராக பயன்படுத்த முடிவதோடு மின்சாரம் தயாரிக்கவும் முடிகிறது. சிறுநீர் அடைக்கப்பட்ட குவளையில் குறிப்பிட்ட அளவு அம்மோனியா உப்பு மற்றும் ஆக்சைடை சேர்க்கும்போது, அதிலிருந்து ஹைட்ரஜன் உருவாகிறது

சிறுநீரில் இருந்து மின்சாரம்

அந்தக் குறிப்பிட்ட வகையான ஹைட்ரஜன் கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. புவி வெப்பமயமாதலை குறைக்கும் நோக்கில் சென்னை ஐஐடி சார்பில் கடந்த மூன்று ஆண்டாக நடத்தப்பட்ட கார்பன் சேலஞ்ச் போட்டியில், இந்த குறிப்பிட்ட ப்ராஜெக்ட்டுக்கு நிதி உதவியும் அனுமதியும் கிடைத்துள்ளது.

இது குறித்து சோதனையை மேற்கொண்ட ஐஐடி மாணவர்கள் அளித்த பேட்டியில்,

“5 லிட்டர் சிறுநீர் சேகரித்து, அதில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையை உருவாக்கி உள்ளோம். பெரிய வணிக வளாகங்களில் 1000 லிட்டர் சிறுநீர் சேகரித்து, அதில் இருந்து எவ்வளவு மின்சாரம் தயாரிக்க முடியும் என்று ஆராய உள்ளோம். ஒரு லிட்டர் சிறுநீரில் இருந்து, 2.32 கிலோ வாட் ஹவர் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. சிறுநீரில் மின்சாரம் உற்பத்தி செய்ய பத்து ரூபாய்க்கும் குறைவான செலவாகிறது. ஆனால், ஒரு கிலோ வாட் ஹவர் மின்சாரம் சந்தை விலையில் 11 ரூபாய் முதல் 14 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சிறுநீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் போது, ஹைட்ரஜன் வாயுவும் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன்மூலம் ஹைட்ரஜன் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்கிறார்கள் வல்லுநர்கள்.

சிறுநீரில் இருந்து மின்சாரம்

இந்த ஆய்வு நடைமுறைக்கு வந்தால், தற்போது அசுத்தமாக காணப்படும் பொதுக் கழிப்பறைகள் சுத்தமாக மாறிவிடும். ஒரு லிட்டர் சிறுநீரில் இருந்து 2.32 கிலோ வாட் ஹவர் மின்சாரம் தயாரிக்கலாம். தயாரிப்பு செலவு என்பது 10 ரூபாய்க்கும் குறைவாகத்தான் இருக்கும்” என்று தெரிவித்தனர்.

இதன்மூலம் "மனிதக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதை நல்ல தொழிலாக மாற்றலாம்" அதேபோல் "பொதுக் கழிப்பறைகள் இதனால் தூய்மையாகிவிடும், அதன் மூலம் நிதியும் கிடைக்கும்"