இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹைபர்சோனிக் ராக்கெட்டை இந்தியா வெற்றிகரமாக இன்று சோதித்துள்ளது. முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஹைபர்சோனிக் ராக்கெட்டை டிஆர்டிஓ வெற்றிகரமாக சோதித்துள்ளது.
ஏரோடைனமிக்ஸ் துறையில், ஒலியின் வேகத்தை மிஞ்சக்கூடிய ஒரு வேகத்தை ஹைபர்சோனிக் என்பார்கள். உலகில் ரஷ்யாவும், சீனாவும்தான் இதுவரை போட்டிப்போட்டுக்கொண்டு ஹைபர்சோனிக் ராக்கெட்டுகளை தயாரித்து வந்திருக்கிறது. கடலில் இருந்தோ அல்லது தரையில் இருந்தோ செலுத்தப்படக்கூடிய, ராக்கெட் பூஸ்டட் மூலம் உந்து சக்தி பெரும் இந்த ஹைபர்சோனிக் ஏவுகணைகள் அல்லது ராக்கெட்டுகள் மிகவும் உயரமாக பறக்க கூடியவை.
பொதுவாக இந்த ஹைபர்சோனிக் ஏவுகணைகள் வேறு எந்த ஆயுதங்களை விடவும் வேகமாக பறக்கும் திறனை கொண்டது. அதாவது மணிக்கு 3,000 மைல்கள் முதல் 10,000 மைல்கள் வரை சீறிப்பாயும் திறன் படைத்தவை. ஹைபர்சோனிக் ராக்கெட்டுகளை பெரும்பாலும் அனைத்து வல்லரசு நாடுகளும் சோதித்து பார்த்து நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கின்றன. இந்தியாவும் ஹைபர்சோனிக் ராக்கெட் தயாரிப்பு பணிகளில் மும்முரம் காட்டி வந்தது.
இந்நிலையில் ஒடிசா மாநிலம் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை சரியாக 11.03 மணிக்கு ஹைபர்சோனிக் ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. டிஆர்டிஓவின் இந்தச் சாதனையை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெகுவாக பாராட்டியுள்ளார். பிரதமரின் தற்சார்பு திட்டத்துக்கு கிடைத்த வெற்றி இது என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இப்போது ஏவப்பட்ட ஹைபர்சோனிக் ராக்கெட் 6 மேக் வேகத்தில் 32 வினாடிகளில் இலக்கை சென்றடைந்தது என்று டிஆர்டிஓ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.