மூலக்கூறு உயிரியல் அறிவியலாளர் ஹர் கோவிந்த் குரானாவின் 96 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் இன்று சிறப்பு கூகுள் டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது.
மரபுக்குறியீடு பற்றியும் புரதத்தை செயற்கையாக உற்பத்தி செய்வதில் அவற்றின் பங்கு குறித்தும் ஆய்வு செய்து 1968 ஆம் ஆண்டு அதற்கான நோபல் பரிசினை மார்சல் நோரென்பர்க், இராபர்ட் ஹாலி ஆகியோருடன் பகிர்ந்து கொண்டவர் ஹர் கோவிந்த் குரானா. இவர், தற்போது பாகிஸ்தனில் உள்ள பஞ்சாப் மாநிலம் ராய்பூர் கிராமத்தில் ஜனவரி 9 1922 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பிறக்கும் போது இந்தப் பகுதி இந்தியாவில் இருந்தது. சிறு வயதில் இருந்தே படிப்பில் ஆர்வம் செலுத்திய குரானா, லாகூரில் அமைந்திருந்த பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். அதன் பின்பு, 1945ஆம் ஆண்டு வேதியியலில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார்.அதன் பின்பு, இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
1960-ல் விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள நொதிகள் பற்றிய ஆய்வு நிறுவனத்தில் குரானா இணைந்தார். அதனைத்தொடர்ந்து அனைத்து ஆய்வுகளையும் மேற்கொண்டார். அப்பொழுது அமெரிக்காவில் இவருக்குக் குடியுரிமை அளிக்கப்பட்டது. 1962 முதல் 1970 வரை பேராசிரியராகவும், உயிர் வேதியல் பேராசிரியராகவும் அந்நிறுவனத்தின் துணை இயக்குநராகவும் குரானா பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. 1970ல் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கழகத்தில் உயிரியல் மற்றும் வேதியியல் பேராசிரியர் பதவி, குரானாவுக்கு அளிக்கப்பட்டது. அங்கு மரபுக் குறியம் பற்றி அவர் ஆற்றிய பணி அவரை உலகறிய செய்தது. அதன் பின்பு ஹர் கோவிந்த் குரானா 2011 நவம்பர் மாதம் 9 ஆம் நாள் இயற்கை எய்தினார். இத்தனை பெருமைக்கு சொந்தக்காரரான குரானாவின் 96 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில், மிகப்பெரிய தேடல் நிறுவனமான கூகுள் தனது முகப்பு பக்கத்தில் இன்று சிறப்பு கூகுள் டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது.