செயற்கை நுண்ணறிவு - டென்மார்க் அரசு web
டெக்

பிரைவசியை கேள்விக்குறியாக்கும் AI! டென்மார்க் அரசு போட்ட அதிரடி சட்டம்! இனி AI-க்கு அபராதம்!

AI தொழில்நுட்பம் அபரிமிதமான வளர்ச்சியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

karthi Kg

எல்லாவற்றையும் கூகுளில் தேடிக்கொண்டிருந்த சமூகம் இப்போது 'எதுக்கும் சாட்ஜிபிடிகிட்ட ஒரு வார்த்தை கேட்டுவிடுவோம்' என AI பக்கம் நகர ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், அதில் சிக்கல்களும் இல்லாமல் இல்லை. அதிலும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் AIயில் ஜெனரேட் செய்ய ஆரம்பித்ததும் எக்கச்சக்க பிரச்னைகள் வர ஆரம்பித்திருக்கின்றன.

கேள்விக்குள்ளாகும் பிரைவசி..

செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்கள் சில சமயங்களில் 'இது நம்ம பக்கத்து தெரு திவ்யா சாயல்ல இருக்கேப்பா' என நம்மையே ஜெர்க் ஆக வைத்துவிடுகிறது . அதிலும் Photorealistic என்றெல்லாம் prompt எழுதினால் அவ்வளவு தான். சும்மாவே நமக்கெல்லாம் கொரிய நடிகர்களுக்குள் வேறுபாடு கண்டுபிடிப்பது கடினம். அதை மேலும் குழப்பமாக்கிவிடுகிறது AI. நாள்தோறும் எண்ணற்ற புகைப்படங்களுக்காகவும், வீடியோக்களுக்காகவும் புதிய புதிய முகங்களை AI உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. ஆனால், இந்த முகங்களுக்கு AI எடுத்துக்கொள்வது நம் டேட்டாவைத்தான். நாம் அனுமதித்த புகைப்படங்களில் இருந்தும், ஏற்கெனவே இணையத்தில் இருக்கும் புகைப்படங்களை வைத்தும் தான் AI கற்றுக்கொள்கிறது. அப்படியெனில் நமக்கென பிரைவசி என எதுவுமே இல்லையா என்கிற கேள்வி எழுகிறது.

Ai

ஊர் முழுக்க சிசிடிவி கேமராக்களை வைத்துவிட்டு பிரைவசி எங்கே என கேட்பதே நகைப்புக்குரிய ஒன்று தான். உண்மையில் நம் பெரும்பாலான டேட்டா நம் அனுமதியுடன் விற்கப்பட்டுக்கொண்டே தான் இருக்கிறது. இப்படியிருக்க, நம் புகைப்படங்களை இன்ஸ்பைரேசனாக வைத்து AI உருவாக்கும் புகைப்படங்களை என்ன செய்வது. புன்முறுவலுடன் கடந்து செல்வதைத் தவிர வேறு வழியில்லை.

ஹாலிவுட் நடிகைக்கு ஏற்பட்ட பிரச்னை..

இது நமக்கு மட்டுமே இருக்கும் பிரச்னையில்லை. ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜொஹான்சனிடம் அவரின் குரலுக்கான காப்புரிமையைப் பெற விழைந்தார் OPENAI சி இ ஓ வான சாம் ஆல்ட்மேன். SKY என்கிற AI VOICE பிராஜெக்டிற்காக ஸ்கார்லெட் ஜொஹான்சனின் குரலை வாங்க முயன்றார் சாம் ஆல்ட்மேன். ஸ்கார்லெட் ஜொஹான்சனோ மறுத்துவிட்டார்.

ஸ்கார்லெட் ஜொஹான்சன்

ஆனால், சில நாட்களிலேயே ஸ்கார்லெட் ஜொஹான்சனின் குரலை ஒத்த வேறொரு குரலில் SKYயை உருவாக்கி டெமோவை வெளியிட்டார் சாம் ஆல்ட்மேன். HER திரைப்படத்தில் AI குரலாக வரும் ஸ்கார்லெட் ஜொஹான்சனின் குரலை வெகுவாக இந்த புது குரல் நினைவுபடுத்தியது . அதிர்ந்து போனார் ஸ்கார்லெட் ஜொஹான்சன் ஸ்கார்லெட் ஜொஹான்சனுக்கே இந்த நிலைமை என்றால் சாமான்யரான நம்மின் நிலையை யோசித்துப் பாருங்கள்.

டென்மார்க் கொண்டுவரும் புதிய சட்டம்..

இப்படியான சூழலில் தான் டென்மார்க் புதிதாக சட்டம் ஒன்றை இயற்றவிருக்கிறது. நம்முடைய முகத்தை ஒத்த, குரலை ஒத்த விஷயங்களை வைத்து AI புகைப்படங்களையோ, குரல்களையோ உருவாக்கும் போது, அதை நீக்கச் சொல்லும் முழு உரிமையை சாமான்யருக்கு வழங்குகிறது இந்த சட்டம்.

Artificial Intelligence

அதே போல், அனுமதியில்லாமல் நம்முடைய முகத்தையும், குரலையும் பயன்படுத்தியதற்காக AI நிறுவனங்களிடம் அபராதத் தொகையும் பெற வழிவகை செய்திருக்கிறது டென்மார்க் அரசு. டென்மார்க் குடிமக்களுக்கு இது நல்ல செய்தி. நம் மக்களுக்கு எப்போது விடிவுகாலம் என்று தான் தெரியவில்லை.