டெக்

“போலீசாருக்கு அனுமதியில்லை” - அசாம் போலீசின் கணக்கை நீக்கிய மாஸ்டோடன்

webteam

மாஸ்டோடனில் கணக்கு தொடங்கிய அசாம் போலீசாரின் கணக்கை அந்நிறுவனம் நீக்கியுள்ளது

மாஸ்டோடன் என்பது ட்விட்டர் போலவே தோற்றமுடைய ஒரு சமூக வலைத்தளமாகும். இது கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. மாஸ்டோடனில் பயனர்கள் தகவல்களை எழுத்துகளாகவோ, படங்கள் மற்றும் வீடியோவாகவோ பதிவிடலாம், கருத்து தெரிவிக்கலாம், பிற பயனர்களைப் பின்தொடரலாம்.

ட்விட்டரின் லோகோவாக குருவி எப்படி இருக்கிறதோ அதேபோன்று, மாஸ்டோடன் பக்கத்தில் யானை லோகோவாக இருக்கிறது. இது ட்விட்டரைவிட மேம்பட்ட பாதுகாப்பு உடையது என்றும், மாஸ்டோடன் பக்கத்தில் யாரேனும் தவறு செய்வதாக புகார் எழுந்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி மாஸ்டோடன் பயனர்களின் விவரங்கள் எந்த வகையிலும் கசிவதற்கோ, உளவுப் பார்ப்பதற்கோ வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ள அந்நிறுவனம், இந்தத் தளத்தில் எந்தவிதமான வணிகரீதியான விளம்பரங்களும் இடம்பெறாது என உறுதியளித்துள்ளது.

இந்நிலையில் அசாம் போலீஸ் மாஸ்டோடனில் கணக்கு தொடங்கியுள்ளனர். ஆனால் போலீசாரின் வருகையால் தாங்கள் உளவு பார்க்கப்படலாம் என யோசித்த பயனாளர்கள் போலீசாரின் கணக்குக்கு எதிராக புகார் அளித்தனர். உடனடியாக அசாம் போலீசின் கணக்கை மாஸ்டோடன் நீக்கியது. போலீசாருக்கு அனுமதியில்லை எனவும் மாஸ்டோடன் தெரிவித்துள்ளது.

இது குறித்து தகவல் தெரிவித்துள்ள மாஸ்டோடன், பயனாளர்கள் சிலர் தாங்கள் உளவு பார்க்கப்படலாம் என புகார் அளித்ததை அடுத்து அசாம் போலீசாரின் கணக்கு நீக்கப்பட்டது என தெரிவித்துள்ளது