சர்வதேச தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது Deepseek. சீனாவைச் சேர்ந்த ஏஐ மென்பொருள் நிறுவனம் தான் 'Deepseek'. தொழில்முனைவர் லியாங் வென்ஃபெங் (Liang Wenfeng), 2023 ஆம் ஆண்டு உருவாக்கிய நிறுவனம். இதுவரையில் ஏஐ கட்டமைப்பில் அமெரிக்க நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்திவந்த நிலையில், Deepseek வருகை, ஒட்டுமொத்த அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை ஆட்டம் காணச் செய்திருக்கிறது.
Deepseek அறிமுகத்தால், கடந்த திங்கள்கிழமை அமெரிக்க பங்குச் சந்தையில் 1 லட்சம் கோடி டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக, செயற்கை நுண்ணறிவுக்கான சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் பங்கு 17% சரிவைக் கண்டது. ஏஐ கட்டமைப்பில் பெரும் முதலீடு செய்துள்ள ஆல்பஃபெட், அமேசான், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் சரிந்தன. ஏன், அமெரிக்க ஏஐ நிறுவனங்கள் மத்தியில் சீனாவின் Deepseek இவ்வளவு பெரிய அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது, அந்த மென்பொருளின் தனித்துவம் என்ன?
2022 நவம்பர் மாதம், அமெரிக்காவைச் Open AI நிறுவனத்தின் சாட்ஜிபிடி அறிமுகமானது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை சாட்ஜிபிடி உலகுக்கு எடுத்துக் காட்டியது. அதைத் தொடர்ந்து கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏஐ கட்டமைப்புக்காக பெரும் தொகையை முதலீடு செய்ய ஆரம்பித்தன. இந்த நிறுவனங்கள் எல்லாம் அமெரிக்காவைச் சேர்ந்தவை. அந்த வகையில், ஏஐ உருவாக்கத்தில் அமெரிக்க தன்னிகரற்ற சக்தியாக தன்னை முன்னிறுத்தத் தொடங்கியது. ஏஐ கட்டமைப்பை உருவாக்க மிகப் பெரும் முதலீடு தேவை. அதிநவீன ஜிபியூ தேவை என்ற சூழலே இதுநாள் வரையில் இருந்துவந்தது.
இந்நிலையில், சீனாவின் Deepseek-R1 செயலியோ, இத்தகைய பெரிய முதலீடுகள் ஏதும் இல்லாமல், பெரிய ஜிபியூ கட்டமைப்பு இல்லாமல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதேசமயம், சாட்ஜிபிடி, கூகுளின் ஜெமினி உள்ளிட்ட அமெரிக்க ஏஐ செயலிகளைவிட Deepseek அதிக செயல்திறனைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவே இன்று Deepseek நிறுவனத்தை உலக முக்கியத்துவம் பெறச் செய்துள்ளது.
ஓப்பன் ஏஐ நிறுவனம், 100 மில்லியன் டாலர் செலவில் சாட் ஜிபிடியை உருவாக்கியது. ஆனால், Deepseek நிறுவனமோ அதன் மென்பொருளை வெறும் 6 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கியுள்ளது. தவிர, இது இலவச செயலி. இதன் நிரல்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். அமெரிக்க நிறுவனங்கள் ஏஐ கட்டமைப்புக்காக பெரும் தொகை முதலீடு செய்துவரும் சூழலில், மிக மிகக் குறைந்த விலையில் உலகின் மிகச் சிறந்த ஏஐ செயலியை சீனா உருவாக்கியுள்ளதால் அமெரிக்க ஏஐ நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன.
இதன் காரணமாகத்தான் “அமெரிக்க நிறுவனங்கள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது” என்று அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். Deepseek நிறுவனத்தின் வருகை, தொழில்நுட்பரீதியாக மட்டுமல்ல அரசியல்ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
சீனா தொழில்நுட்பரீதியாக தனக்கு நிகராக வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, அதி நவீன ஏஐ சிப்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா 2022 ஆம் ஆண்டு கட்டுப்பாடுகள் விதித்தது. இவ்வாறு, அமெரிக்கா தன்னுடைய மேம்பட்ட தொழில்நுட்பக் கட்டமைப்பு வழியாக உலக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வரும் சூழலில், அமெரிக்காவின் ஏகபோக போக்கை மட்டுப்படுத்தும் சக்தியாக இன்று Deepseek உருவெடுத்து இருக்கிறது.