chandrayaan 3
chandrayaan 3 pt web
டெக்

சந்திரயான் 4 திட்டம்; ஜப்பானுடன் இணைந்து அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் இந்தியா!

PT WEB

LUPEX என்பது என்ன?

சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக நிலவை நோக்கிய சந்திரயான் 4 திட்டத்தை ஜப்பான் உடன் இணைந்து இந்தியா செயல்படுத்த உள்ளது. LUPEX என அழைக்கப்படும் இந்த திட்டத்தில் ரோபோட் இயந்திரங்களை நிலவிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. The Lunar Polar Exploration mission (LUPEX) திட்டமே சந்திரயான் 4 எனும் பெயரில் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. இந்தியாவும் ஜப்பானும் இணைந்து இயந்திர ரோபோடிக் தொழில்நுட்ப ரோவர் மற்றும் லேண்டரை நிலவிற்கு அனுப்பும் திட்டம் தான் LUPEX.

jaxa

2017 ஆம் ஆண்டு இந்தியாவின் விண்வெளி நிறுவனமான இஸ்ரோவும் ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனமான JAXA வும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இஸ்ரோவுடன் இணையும் ஜாக்ஸா

சந்திரயான் 1 விண்கலம் நிலவின் தென்பகுதியில் நீர் மூலக்கூறுகள் இருப்பதற்கான ஆதாரத்தை அறுதியிட்டு கண்டறிந்த நிலையில், சந்திரயான் 2 திட்டத்திற்கு பிறகு சந்திரயான் 3 திட்டம் LUPEX ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் சந்திரயான் இரண்டு திட்டத்தின் லேண்டர் தரையிறங்காத காரணத்தால், சந்திரயான் இரண்டு திட்டத்தின் நீட்சியாக சந்திரயான் 3 இருந்தது. இந்நிலையில் தற்போது சந்திராயன் 3 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி அறிவியல் ஆய்வுகளை தொடங்கியுள்ள நிலையில் இஸ்ரோவின் அடுத்த கட்ட நிலவின் ஆய்வு LUPEX ஆக இருக்கும் என கூறப்படுகிறது. சந்திரயான் திட்டத்தின் நீட்சியாக LUPEX இருக்கும் என கூறப்படுகிறது.

இதற்கான முன்னோட்டமாக இந்திய மற்றும் ஜப்பான் விஞ்ஞானிகள் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் இரண்டு வாரத்திற்கு முன்பு நேரில் சந்தித்து LUPEX திட்டம் குறித்தும், சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா விண்கலம் எடுக்கும் தரவுகளை பகிர்வது தொடர்பாக விவாதித்துள்ளனர். முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. LUPEX திட்டத்தில் உள்ள லேண்டர் இந்தியா சார்பிலும் ரோவர் ஜப்பான் சார்பிலும் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஆறுமாத காலமே ஆயுட்காலம்

சந்திரயான் 3 திட்டத்தின் லேன்டரில் உள்ள அறிவியல் ஆய்வுக் கருவிகள் தங்களது பணியை தொடங்கியுள்ளது. ரோவரும் லாண்டரில் இருந்து தனித்து இயங்க தொடங்கி அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. சந்திரயான் 3 திட்டத்தில் அறிவியல் ஆய்வுகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்தான அனைத்து தகவல்களும் ஜப்பான் விண்வெளி ஆய்வு மையத்திற்கும் பகிரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் 3 திட்டத்தின் மேற்கொள்ளப்படும் தரவுகள் மற்றும் ஆய்வுகளின் நீட்சியாக சந்திரயான் 4 இருக்கும் எனவும் இந்த ஆய்வின் தொடர்ச்சியாக LUPEX திட்டம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. LUPEX திட்டத்தின் லேன்டர் மற்றும் ரோவர் ஆறு மாத காலம் ஆயுட்காலம் எனவும் லேண்டர் இரண்டும் சேர்த்து 350 கிலோ தான் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பில் துளையிடக் கூடிய இயந்திர கைகள் LUPEX திட்டத்தில் ரோவரில் இருக்கும் என்றும் இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் உள்ள மண் படிமங்களை சேகரிக்க முடியும் என்றும், நீர் மூலக்கூறுகளை சேகரிக்கவும் முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

சந்திரயான் 3 விண்கலம் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஜப்பான் நாளை ஸ்லிம் எனப்படும் நிலவை நோக்கிய விண்கலத்தை அனுப்ப உள்ளது. இந்தியாவின் நிலவை நோக்கிய வெற்றியை அடுத்து ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோவுடன் சந்திரயான் 4ல் பணியாற்ற மிகவும் ஆர்வத்தோடு இருப்பதாக கூறப்படுகிறது. 2025-ல் பிற்பகுதியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.