சந்திரயான் 3
சந்திரயான் 3  PT web
டெக்

வெற்றிகரமாக நிலவில் கால்பதித்த சந்திரயான்3 லேண்டர்: விண்ணில் பொறிக்கப்பட்ட இஸ்ரோவின் சரித்திர சாதனை!

Prakash J

உலக வரலாற்றில் இந்திய விண்வெளி ஆய்வுத் துறை சரித்திரமிக்க சாதனையைப் படைத்துள்ளது. ஆம், விண்ணுக்கு ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் இன்று மாலை சரியாக 6.04 மணியளவுக்கு நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கிய உலகின் முதல் விண்கலம் என்ற பெருமையை சந்திரயான் 3 பெற்றுள்ளது. அதனை சாதித்துக் காட்டிய முதல் நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக நிலவில் வெற்றிகரமாக கால்பதித்த நான்காவது நாடாக இந்தியாவும் இடம்பிடித்துள்ளது. சந்திரயான் மூலம் கிடைக்கப் போகும் தரவுகள் இந்தியாவிற்கு மட்டுமின்றி மனித குலத்திற்கே பயன்படும் என்பதால் இந்த வெற்றியை, உலக நாடுகள் இணைந்து உன்னிப்பாக எதிர்பார்த்து காத்திருந்தன குறிப்பிடத்தக்கது.

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய சந்திரயான்-3, உந்துவிசைக் கலன் பூமியின் வளிமண்டலத்தையும் சூரியக் குடும்பத்தின் கோள்களின் நிலையையும் கண்காணிக்கும் வகையில் செயல்படும். நிலவின் மேற்பரப்பில் விண்கற்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கண்டறிய முடியும்.

மேலும், தென் துருவத்தில் உறைந்த மண்ணில் நீரின் தடயங்களை சந்திரயான்-3 கண்டறிந்தால், அது எதிர்காலச் சோதனைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நிலவில் உள்ள தண்ணீரைக் கண்டறிந்தால், அதில் இருந்து ஆக்ஸிஜனையும் உருவாக்கலாம். அங்கு மனிதர்கள் வசிக்கும் சூழ்நிலையை உருவாக்குவதற்கு இது பயனுள்ளதாகவும் இருக்கும்.