டெக்

சந்திராயன்-2 திட்டம் 2வது முறையாக ஒத்திவைப்பு : இஸ்ரோ

சந்திராயன்-2 திட்டம் 2வது முறையாக ஒத்திவைப்பு : இஸ்ரோ

webteam

நிலாவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-2 விண்கலத்தை அனுப்பும் திட்டம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2008ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திராயன்-1 விண்கலம், நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்து அங்கு நீர் இருப்பதை கண்டுபிடித்தது. இதைத் தொடர்ந்து சந்திரனில் இறங்கி ஆய்வு செய்வதற்காக மிகவும் சவாலான திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முயற்சித்து வருகிறது. இதற்காக சந்திராயன்-2  விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் அனுப்ப இருந்த விண்கலத்தை வரும் அக்டோபர் முதல் வாரத்தில் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. 

இந்நிலையில், தொழில்நுட்பப் பிரச்னைகளை சரி செய்வதற்கு கூடுதல் காலம் தேவைப்படுவதால் அதனை விண்ணில் செலுத்தும் திட்டத்தை மீண்டும் ஒத்திவைத்துள்ளது. இதன்படி டிசம்பர் மாதம் சந்திராயன்-2 விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்தாண்டு இரண்டு முறை செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் திட்டம் தோல்வியில் முடிவடைந்ததையடுத்து இந்த விவகாரத்தில் இஸ்ரோ அதிக கவனமாக உள்ளது. சந்திராயன்-2  விண்கலம் திட்டம் வெற்றியடைந்தால் நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் 4வது நாடு என்ற இடத்தை இந்தியா பிடிக்கும். அதேவேளையில் நிலவை ஆய்வு செய்வதற்காக இதேபோன்ற திட்டத்தை இஸ்ரேலும் டிசம்பரில் மேற்கொள்ள முயற்சித்து வருகிறது.