சுதந்திர தின சலுகையாக ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு வழங்கும் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், வெறும் 1 ரூபாய்க்கு மாத இணையம் மற்றும் பேச்சு சேவையை (unlimited voice call) வழங்கும் திட்டத்தையும் அறிவித்துள்ளது.
இந்தியாவின் பொதுத்துறை தொலைத்தொடா்பு நிறுவனமான பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), ‘சுதந்திர தின திட்டத்தை’ வெள்ளிக்கிழமை (ஆக. 1) அறிமுகப்படுத்தியது.
இந்தத் திட்டம் ஆகஸ்ட் மாதம் 30 நாள்களுக்கு மட்டும் பிஎஸ்என்எல்-இன் 4ஜி சேவைகளை இலவசமாக சோதித்துப் பாா்க்கும் வகையில் ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம்கார்டு சேவையை வழங்குகிறது. இது இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும்.
மேலும், இந்தியாவிலேயே (மேக் இன் இந்தியா) உருவாக்கப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்தை இலவசமாக அனுபவிக்க பொதுமக்களுக்கு இது ஒரு வாய்ப்பாகும். இது குறித்த அறிவிப்பை பிஎஸ்என்எல் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த திட்டத்தில் சேரும் பயனாளிகளுக்கு, ஒவ்வொரு நாளும் 2ஜிபி டேட்டா, அனலிமிடெட் குரல் அழைப்பு, மற்றும் 100 எஸ்எம்எஸ், என பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன. மேலும், ஒரு இலவச சிம் கார்டும் வழங்கப்படுகிறது. இதனைப் பெறுவதற்கு, பிஎஸ்என்எல் கிளைகளில் நேரிலோ, அல்லது ஆன்லைன் மூலமாகவோ பதிவு செய்யலாம்.
” ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் பிஎஸ்என்எல்லின் 4ஜி உருவாக்கப்பட்டுள்ளநிலையில், சொந்தமாக தொலைத்தொடர்பு சேவையை உருவாக்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேரும் என்பதை குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம். எங்கள் 'சுதந்திரத் திட்டம்' ஒவ்வொரு இந்தியருக்கும் இந்த உள்நாட்டு நெட்வொர்க்கை 30 நாட்களுக்கு இலவசமாக சோதித்துப் பார்க்க வாய்ப்பளிக்கிறது,.” என்று பிஎஸ்என்எல் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஏ ராபர்ட் ஜே ரவி கூறியுள்ளார்.