போக்குவரத்து நெரிசல்களில் சிக்கும் போதெல்லாம் நமது வாகனம் பறந்து சென்றால் எப்படி இருக்கும் என நாம் நினைப்பதுண்டு. அந்த எண்ணத்தை சாத்தியப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் கார் ஒன்று அறிமுகமாகியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த வாகனம் ஒரு பறக்கும் கார். இதன் பெயர் பிளாக் ஃப்ளை. இந்தப் பறக்கும் காரை இயக்க பைலட் உரிமம் தேவையில்லை. மணிக்கு 62 மைல்கள் வேகத்தில் இதனை இயக்க முடியும். இது போன்ற பறக்கும் கார்கள் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் குறைந்த விலை என்பதே இந்த காரின் தனிச்சிறப்பு. அதாவது இந்த பிளாக் ஃப்ளை கார்கள் எஸ்யூவி மாடல்கள் விலையிலேயே கிடைக்கும் என்கிறது இதன் தயாரிப்பு நிறுவனம். ஏற்கனவே கனடாவில் பிளாக் ஃப்ளை கார்களின் சோதனை ஓட்டம் நடந்துள்ளது. தற்போது ஒருவர் மட்டுமே அமர்ந்து பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரை புல் தரையில் இருந்து கூட டேக் ஆஃப் செய்யலாம்.
இந்தப் பறக்கும் காரை இயக்க பைலட் உரிமம் தேவையில்லை என்றாலும், இதனை இயக்குவதற்கு என பிரத்யேக பயிற்சிகளை எடுக்க வேண்டும், சில தேர்வுகளையும் எழுத வேண்டும் என்கிறது ஓபனர் நிறுவனம். தாமாகவே இயங்கும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மனிதர்களை சுமந்து செல்லும் ட்ரோன்கள் என அழைக்கப்படும் இது போன்ற பறக்கும் கார்களை தயாரிப்பதில் பல்வேறு நிறுவனங்களும் போட்டி போடுகின்றன. அதே வேளையில் அன்றாட பயன்பாட்டின் போது இந்த வகை கார்கள் விபத்தில் சிக்குமா? என்ற கேள்வியும் எழுகிறது. முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது அதற்கான விடை கிடைக்கும்.