bitchat pt web
டெக்

BITCHAT | ஜேக்கின் புதிய செயலி... இணையம் இல்லாமல் CHAT செய்ய முடியுமா..?

ட்விட்டர் இணை நிறுவனர் ஜேக் டார்ஸி அறிமுகம் செய்துள்ள BITCHAT செயலி, இணையம் இல்லாமலே Bluetooth வழியாக மெசேஜ் அனுப்பக்கூடியது. இதில் மொபைல் நெட்வொர்க், Wi-Fi தேவையில்லை..

karthi Kg

ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனரான ஜேக் டார்ஸி , BITCHAT என்னும் புதிய செயலியை அறிமுகப்படுத்தவுள்ளார். இணைய வசதி இல்லாமலே, வெறும் ப்ளூடூத் வழியாகவே இந்த செயலியை வைத்து மற்றவர்களுக்கு மேசேஜ் அனுப்ப முடியும் என்பதால், இந்த செயலி பேசுபொருளாகியிருக்கிறது. உண்மையில், இது எந்த அளவுக்கு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படும் என்பதை பார்க்கலாம்.

WhatsApp

பொதுவாக நாம் வாமு , அதாவது வாட்சாப்பிற்கு முன் SMS வசதியைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு தகவல்களைப் பரிமாறிக்கொண்டிருந்தோம். SMS செல்லுலார் வசதி மூலம் இயங்குகிறது. வாட்சாப் இணைய சூழலில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. இப்போதெல்லாம் OTP போன்ற சில அத்தியாவசிய தேவைகளைத் தவிர, எதற்கும் யாரும் மெசேஜ் பக்கம் போவதில்லை. எல்லாமே வாட்சாப் தான். வாட்சாப், டெலிகிராம் என Chat செய்ய எண்ணற்ற செயலிகள் இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால், இந்த செயலிகள் இயங்க இணையம் தேவை.

BITCHAT

இந்தச் சூழலில்தான் இணையம் இல்லாமலே CHAT செய்யலாம் என ஜேக் டார்ஸி BITCHATஐ அறிமுகம் செய்திருக்கிறார். இந்த செயலி இன்னும் சோதனை அடிப்படையில்தான் இருக்கிறது. முதலில் இந்த செயலி எப்படி இயங்குகிறது என்று பார்க்கலாம். இது முற்றிலும் பரவலாக்கப்பட்ட மற்றும் Bluetooth Low Energy (BLE) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது .

இன்டர்நெட் இல்லாமல் மெசேஜ்

Bitchat செயலி Bluetoothஇன் உதவியுடன் ஒரு 'Mesh Network' ஐ உருவாக்குகிறது. ஒரு பயனர் மற்றொரு பயனருக்கு அருகில் இருக்கும் போது, அவர்களின் சாதனங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன. அதாவது ப்ளூடுத் வழி மொபைல்களை இணைப்பது. அதிகபட்சமாக 100 மீட்டர் சுற்றளவுக்கு இந்த செயலியை பயன்படுத்த முடியும். நீங்கள் அனுப்பிய மெசேஜை பெற வேண்டியவர் ப்ளூடூத் வெளியை கடந்துவிட்டால், உங்கள் மொபைலிலேயே அது தற்காலிமாக சேமித்து வைக்கப்படும். அவர் ப்ளூடூத் சர்க்கிளுக்குள் வந்ததும், அவருக்கு அந்த மெசேஜ் அனுப்பப்படும்.

Bitchat நம்மிடம் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண்கள் போன்ற எந்த தகவல்களையும் கேட்காது. கணக்கு எதையும் தொடங்காமலே, bitchat செயலியை தரவிறக்கிக்கொண்டு நாம் நம் சுற்றியிருப்பவர்களிடம் சாட் செய்ய முடியும்.

end-to-end encrypted

இந்த செயலியை பயன்படுத்த இணையம், Wi-Fi அல்லது மொபைல் நெட்வொர்க் என எதுவும் தேவையில்லை. இதுதான் இதன் மிகப்பெரிய சிறப்பம்சம். பயனர்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் முற்றிலும் ஆஃப்லைனில் செய்தி பரிமாற்றம் செய்யலாம். நம்முடையை டேட்டாவை யாரேனும் கண்காணிக்கிறார்களா என அச்சப்படத் தேவையில்லை.

இதில் செய்திகள் end-to-end encrypted முறையில் அனுப்பப்படுகின்றன. அதாவது செய்திகள் அனுப்புநர் மற்றும் பெறுநர் இடையே மட்டுமே இருக்கும். எந்த மூன்றாம் தரப்பினரோ அல்லது சர்வரோ இந்த செய்திகளைப் பற்றிய தகவல்களை அறிய முடியாது. மேலும், இந்த செய்திகள் 12 மணி நேரத்தில் தானாகவே அழிந்துவிடும். நமக்குத் தேவைப்படும் செய்திகளை நாம் ஃபேவரைட் செய்து வைத்துக்கொள்ளலாம்.

தற்போது, Bitchat iPhone பயனர்களுக்கு மட்டுமே Apple இன் TestFlight platform இல் beta mode இல் கிடைக்கிறது. இதன் beta testing இல் ஏற்கெனவே 10,000 பயனர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆண்டிராய்டு வெர்சனின் Betaவையும் பதிவேற்றியிருக்கிறார் ஜாக்.

எப்போது அதிகமாகப் பயன்படும்

இப்படியான செயலிகள் உருவாக்கப்படுவது இது முதல் முறை அல்ல. berty, briar என இதே வசதிகளுடன் மார்க்கெட்டில் சில செயலிகள் ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கின்றன. அரசுகள் இணைய சேவையை ஒரு குறிப்பிட்ட பகுதியில் துண்டிக்கும் போதோ, அல்லது கண்காணிக்கும் போதோ இத்தகைய செயலிகள் பயன்படும். அதே போல், குழுவாக எங்கேனும் செல்லும் போது, அங்கு சரியாக சிக்னல் இல்லை என்றால், இதைப் பயன்படுத்தி ஒருவருக்கு ஒருவர் கனெக்ட்டில் இருந்துகொள்ள முடியும். அதிகபட்சம் 100 மீட்டர் என்பதால், ஆச்சர்யம், அதிசயம் என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு இதில் பெரிதாக எதுவும் கிடையாது . ஜாக் டார்ஸியும் இதை ஒரு வீக்கெண்ட் பிராஜெக்ட் அளவுக்குத்தான் டீல் செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.