வானில் தெரிந்த பீவர் மூன் pt
டெக்

வானில் நிகழ்ந்த அதிசயம்.. பிரகாசித்த பிரம்மாண்ட 'பீவர் மூன்'! 2019-க்கு பின் தோன்றிய அரிய காட்சி!

கடந்த பௌர்ணமி தினத்தன்று எப்போதும் போலில்லாமல் பூமியை நோக்கி சந்திரன் நெருங்கி நகர்ந்ததாகவும், அதனால் மிகப்பெரிய நிலவாக காட்சியளித்ததாகவும் சொல்லப்படுகிறது..

Rishan Vengai

நவம்பர் மாத பௌர்ணமி தினத்தில் வானில் தோன்றிய 'பீவர் சூப்பர் மூன்' நிகழ்வு வானியல் ஆர்வலர்களை கவர்ந்தது. இந்த அரிய நிகழ்வில், நிலவு வழக்கத்தை விட 14% பெரியதாகவும் 30% அதிக வெளிச்சத்துடனும் பிரகாசித்தது. 2019-க்கு பின் இத்தகைய பிரகாசத்துடன் நிலவு தோன்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வானியல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'பீவர் சூப்பர் மூன்' (Beaver Supermoon) நிகழ்வு, நேற்று, பௌர்ணமி தினத்தில் வானில் கண்கவர் காட்சியளித்தது. இந்த வருடத்தில் தோன்றிய சூப்பர் மூன்களில் இது இரண்டாவது மிகப் பிரகாசமான நிகழ்வாகும்.

இந்த அரிய நிகழ்வில், முழு நிலவு வழக்கமான அளவைவிட 14 சதவீதம் பெரிதாகவும் மற்றும் 30 சதவீதம் அதிக வெளிச்சத்துடனும் ஜொலித்தது. இந்திய நேரப்படி நேற்று மாலை 6.49 மணியளவில் நிலவு அதன் பிரகாசத்தின் உச்சத்தை எட்டியதாக வானியல் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தினர்.

பீவர் மூன்

நிலவு பூமியைச் சுற்றிவரும் சுற்றுப்பாதை ஒரு நீள்வட்ட வடிவம் கொண்டது. இந்தப் பாதையில் நிலவு பூமிக்கு மிக அருகில் வரும் புள்ளி 'பெரிஜி' எனப்படுகிறது. முழு நிலவானது இந்தக் 'பெரிஜி' புள்ளிக்கு மிக அருகில் வந்தபோதுதான் சூப்பர் மூன் நிகழ்வு உருவானது. இதன் காரணமாகவே நிலவு பெரியதாகவும், பிரகாசமாகவும் தோன்றியது. குறிப்பாக, கடந்த 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு இத்தகைய பிரகாசத்துடன் நிலவு தோன்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அது என்ன பீவர் மூன்..?

நவம்பர் மாத பௌர்ணமி நிலவுக்கு 'பீவர் மூன்' என்று பெயரிடப்படுவதற்கு ஒரு சுவாரஸ்யமான பின்னணி உள்ளது.

நவம்பர் மாத முழு நிலவுக்கு 'பீவர் மூன்' (Beaver Moon) என்று பெயரிடப்படுவது வட அமெரிக்கப் பழங்குடி மக்களின் பாரம்பரியத்தில் இருந்து வந்தது. குளிர்காலம் தொடங்குவதற்கு முன், Beavers அதாவது நீர்நாய்களின் அடர்த்தியான உரோமத்தைக் குளிருக்காகச் சேகரிக்க வேட்டைக்காரர்கள் கூண்டு வலைகளை அமைக்கும் காலத்தை இது குறிக்கிறது. அத்துடன், நீர்நாய்கள் குளிர்காலத்திற்கான தங்குமிடங்களை கட்டத் தொடங்கும் காலத்தையும் இது குறிப்பதாகச் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.

பீவர் மூன்

இந்த அரிய நிகழ்வு உலகம் முழுவதும் தெளிவாகத் தெரிந்தது. இந்தியாவிலும் மக்கள் இதனை கண்டு ரசித்தனர். எனினும், சென்னை, கோவை, மதுரை போன்ற நகர்ப்புறங்களில் உள்ள ஒளி மாசு காரணமாக, முழு நிலவைப் படம்பிடிக்க விரும்பியவர்கள், ஒளி மாசு குறைவாக உள்ள தொலைதூர இடங்களைத் தேர்வு செய்யுமாறு ஆய்வாளர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

குறிப்பாகச் சென்னையில் வசித்தவர்கள், ஒளி மாசு குறைவாகக் காணப்படும் வாணியம்பாடி பகுதியிலுள்ள வைனு பப்பு கோள் ஆய்வகப் பகுதிக்குச் சென்று பிரகாசமான நிலவைப் படம்பிடிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.