Ola, Uber, Rapido போன்ற செயலி அடிப்படையிலான பைக் டாக்ஸி சேவைகளுக்கு ஒழுங்குமுறை விதிகள் இல்லாததால் தவறான விசயங்களுக்கு பைக்கை பயன்படுத்துதல், பாலியல் அச்சுறுத்தல் போன்றவற்றால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் ஒழுங்குமுறை விதிகள் வகுக்கப்படும் வரை பைக் டாக்ஸியை ஓட்டக்கூடாது என கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், ஜுன் 16 முதல் பைக் டாக்ஸி சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த சூழலில் பைக் டாக்ஸி சேவை நிறுத்தப்பட்ட சூழலில் பெரும்பாலான மக்கள் ஆட்டோவை நாடும் நிலையில், ஆட்டோக்கள் கட்டணத்தை ரூ.70 வரை உயர்த்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு போன்ற பெருநகரங்களில் பைக் டாக்ஸி சேவை அலுவலகம் செல்வோருக்கு பெரும் உதவியாக இருந்து வந்த சூழலில், தற்போது பைக் டாக்ஸி சேவை தடைசெய்யப்பட்டிருப்பது மக்களை ஆட்டோக்களை புக்செய்ய நிர்பந்தித்துள்ளது.
இந்த சூழலை பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்தோடு செயல்பட்டுள்ள ஆட்டோக்கள் சாதாரண கட்டணத்தை விட ரூ.70 வரை கட்டணத்தை உயர்த்தியிருப்பதாக டெக்கான் ஹெரால்டு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது அன்றாட பைக் டாக்ஸி சேவையை பயன்படுத்திவந்த நடுத்தர மக்களுக்கு பேரிடியாக விழுந்துள்ளது.
கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவின் மீதான மேல்முறையீடு மனு ஜூன் 24ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், அதுவரை பைக் டாக்ஸி சேவைகளுக்கு தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.