விண்வெளியில் சுமார் தற்போது 12ஆயிரம் செயற்கைக்கோள்கள் சுற்றிவருகின்றன. 2025ஆம் ஆண்டில் 7 மாதங்களில் மட்டும் சுமார் ஆயிரம் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் சுமார் 2 ஆயிரம் செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டு வருகின்றன. இவை காலாவதியாகும்போது முழுமையாகவும் உடைந்த பாகங்களாகவும் விண்வெளியைச் சுற்றிவரப் போகின்றன. இது தவிர 50 ஆண்டுகளுக்கு மேலாக பல நாடுகள் அனுப்பிச் செயல்பாடுகளுக்குப் பிறகு கைவிடப்பட்டு பூமியைச் சுற்றிவரும் செயற்கைக்கோள்களின் பாகங்களும் இருக்கின்றன. ஒரு சென்டி மீட்டர் நீளத்திற்கு மேலான உடைந்த பாகங்கள் எண்ணிக்கை 12 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது.
10 சென்டிமீட்டர் நீளத்திற்கு மேலான பாகங்கள் 50 ஆயிரம் என கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றால் தற்போது சுற்றி வரும் செயற்கைக்கோள்களுக்கும் புதிதாக அனுப்பப்படும் செயற்கைக்கோள்களுக்கும் ஆபத்து நேரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இவை செயற்கைக்கோள்களுடன் மோதும்போது தகவல் தொடர்பு, கண்காணிப்பு என முக்கிய சேவைகள் பாதிக்கப்படும். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அமெரிக்காவின் அஸ்ட்ராஸ்கேல் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனம் பாதுகாப்பான முறையில் விண்வெளி குப்பைகளை கண்டறியும் சாதனத்தை கண்டறிந்துள்ளது. இதற்கு அமெரிக்க அரசின் காப்புரிமையும் கிடைத்துள்ள நிலையில் அடுத்தாண்டு முதல் இது பணியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.