ஆப்பிள் புதிய தலைமை செயல் அதிகாரி ஜான் டர்னஸ் பொறுப்பேற்ற பிறகு நடத்தும் முதல் “சர்ப்ரைஸ் அண்ட் ஷைன்” நிகழ்வு இன்று இரவு 10.30க்கு ஆப்பிள் பார்க் தலைமையகத்தில் நடக்கிறது. இதில் பல வருட வதந்திகளுக்குப் பிறகு, புத்தக வடிவ மடிப்பு அமைப்புடன், “ஐபோன் அல்ட்ரா” என்ற பெயரில் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் அறிமுகமாகும் என உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆப்பிளின் புதிய தலைமை செயல் அதிகாரியாக ஜான் டர்னஸ் பொறுப்பெற்றபிறகு நடத்தும் முதல் நிகழ்வு ‘ஆப்பிள் திருவிழா’ போல இன்று நடக்கிறது. தொழில்நுட்ப உலகின் கவனத்தை பெரிதும் ஈர்த்திருக்கும் இந்த பிரம்மாண்ட நிகழ்வு "சர்ப்ரைஸ் அண்ட் ஷைன்" என்ற பெயரில் இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் பார்க் தலைமையகத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில், முதல் மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் அறிமுகமாகும் என பெரிதளவில் எதிர்பார்க்கப்படுகிறது. அதனுடன் ஐபோன் 18 ப்ரோ சீரிஸ், புதிய ஆப்பிள் வாட்ச் மாடல்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஏர்பாட்ஸ் போன்ற ஃபியூச்சர்களும் கவனம் பெறுகின்றன. இந்த நிகழ்வை நேரலை மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், ஆப்பிள் டிவி ஆப் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் வழியாக பயனர்கள் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு நடைபெறும் ஆப்பிள் வெளியீட்டு நிகழ்வை ஸ்பெசலாகவும், எல்லோரையும் பார்க்க தூண்டும் ஒன்றாகவும் மாற்றுவதற்கு முக்கிய காரணம் ‘மடிக்கக்கூடிய ஐபோன்’ஆக இருக்கலாம்.. இதோ வருகிறது, இப்போ வந்துவிடும் என்ற பல வருட வதந்திகளுக்குப் பிறகு, ஆப்பிள் தனது முதல் மடிக்கக்கூடிய ஐபோனை இந்தமுறை அறிமுகம் செய்யும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாடல் “ஐபோன் அல்ட்ரா” என்று பெயரில் வெளியிடப்படும் என்றும், சாம்சங்கின் கேலக்ஸி Z ஃபோல்ட் தொடரைப் போன்ற புத்தக வடிவ மடிப்பு அமைப்பை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. கசிந்த தகவல்களின்படி, ஆப்பிள் நிறுவனம் 'Hinge' பகுதியில் அதிக கவனம் செலுத்துவதாகவும், உள் திரையில் தெரியும் மடிப்பைக் குறைத்துள்ளதாகவும் தெரிகிறது. இதுவரையில் இல்லாத அதிக விலை கொண்ட ஐபோனாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை 2,500 டாலருக்கும் அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே ஆப்பிளின் இதுவரையிலான ஐபோன்களிலேயே மிகவும் பிரீமியம் ஆனது ஆகும். இந்தியாவில் இதன் விலை தோராயமாக 2.6 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.
அதேபோல foldable iPhone உடன், வழக்கமான பிரீமியம் வரிசையில் ஐபோன் 18 புரோ மற்றும் ஐபோன் 18 புரோ மேக்ஸ் மாடல்களும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல்களில் முந்தைய ஃபியூச்சர்களை ஒப்பிடும்போது மிகப்பெரிய மாற்றங்கள் இருக்காது என்றாலும், திரை மற்றும் முன்பக்க கேமரா அமைப்பில் சில முக்கிய மாற்றங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. அதேநேரம் ப்ரோ மாடல்களில் புதிய A20 ப்ரோ சிப், மேம்படுத்தப்பட்ட பேட்டரி ஆயுள் மற்றும் குறிப்பிடத்தக்க கேமரா மேம்பாடுகள் இடம்பெறக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதைத்தொடர்ந்து ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 12 மற்றும் ஒரு புதிய ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா போன்ற பியூச்சர்களும், புதிய ஏர்பாட்ஸும் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.