டெக்

'வேறு வழியில்லை இனிமேல் Type - C தான்'.. மாற்றத்தை உறுதி செய்த ஆப்பிள் நிறுவனம்

webteam

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் அனைத்திலும் தற்போது பெரும்பாலும் Type - C போர்ட்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் ஐபோன்களில் லைட்னிங் போர்ட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இனிமேல் ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனை செய்யப்படும் எலக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்திலும் Type - C போர்ட் கட்டாயம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது ஐரோப்பிய ஆணையம். இந்த சட்டம் வரும் 2024-ம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்திய அரசும் கூட Type - C போர்ட்டை கட்டாயமாக்குவதற்கான வழிகளை ஆராய்ந்து வருவதாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. ஆண்ட்ராய்டு போன்கள் அனைத்திலும் Type - C போர்ட் பரவலாகி விட்ட நிலையில் ஐபோன்களில் இந்த போர்ட் பயன்படுத்தப்படுமா என்பதைப் பற்றி ஆப்பிள் நிறுவனம் எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகை நடத்திய மேடைக் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்ட ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரிகளான கிரேக் ஃபெடரிகி மற்றும் கிரெக் ஜோஸ்வியாக் ஆகிய இரண்டு பேரும் ஐபோன்களில் Type - C போர்ட்கள் கொடுக்கப்படவுள்ளன என்ற தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆப்பிள் நிறுவனத்துக்கு இந்த முடிவில் விருப்பமில்லை என்றாலும் கூட இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதே சமயம் இந்த முடிவு ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ளே விற்பனை செய்யப்படும் ஐபோன்களுக்கு மட்டுமா என்பதையும் Type - C போர்ட் எப்போது வெளியாகும் ஐபோன்களில் கொடுக்கப்படும் என்பதையும் இருவரும் உறுதிப்படுத்த மறுத்திருக்கிறார்கள். ஏற்கெனவே ஆப்பிள் நிறுவனம்  Type- C போர்ட்டை பரிசோதனை வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. அதன்படி பார்த்தால் அடுத்த வருடம் வெளியாகவுள்ள ஐபோன் 15 -ல்  Type -C போர்ட் கொடுக்கப்படலாம்.