சூரியகிரஹணம் கடந்த பாதை
சூரியகிரஹணம் கடந்த பாதை PT
டெக்

அப்படினா இதெல்லாம் வெறும் வதந்தியா? சூரிய கிரகணத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்! விளக்குகிறார் அறிவியலாளர்

Jayashree A

ஏப்ரல் 8ம் தேதி ஏற்பட்ட சூரிய கிரகணம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது. நீண்ட நேரம் நீடித்த இந்த முழு சூரிய கிரகணத்தை திங்கட்கிழமை இரவு அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர். மூன்று நாடுகளின் வாயிலாக இந்த கிரகணம் வட அமெரிக்காவை கடந்து சென்றது.

இந்த சூரிய கிரகணத்தின் போது, நான்கு நிமிடங்கள் மற்றும் ஒன்பது வினாடிகளுக்கு முழு இருள் நீடித்தது. இந்த முழு சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இரவு 9.12 மணிக்குத் தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.22 மணிக்கு நிறைவடைந்தது.

எனினும், முழு சூரிய கிரகணம் இரவு நேரம் என்பதால் இந்தியாவில் இந்த கிரகணத்தைப் பார்க்க முடியவில்லை.

சூரிய கிரகணம் குறித்த விளக்கங்களை, விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் நம்மிடையே பகிர்ந்துகொண்ட தகவல்.

முழு சூரிய கிரகணம் என்ன?

”ஒளிதரும் சூரியனை நாம் வாழும் பூமி சுற்றிவருகிறது. பூமியை நிலவானது நீள்வட்ட பாதையில் சுற்றிவருகிறது. ஒருகட்டத்தில் சூரியன் நிலா பூமி இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் பொழுது நிலவானது சூரியனை மறைக்கும். அப்பொழுது நிலவின் நிழலானது பூமியின் மீது விழுகிறது. இது தான் சூரிய கிரகணம்.

விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன்

நிலவானது பூமியை விட சிறிது ஆகையால் அதன் நிழலானது பூமியை முற்றிலும் மறைக்காமல், பூமியின் மீது ஏதாவது ஒரு இடத்தில் விழும். பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் பொழுது நிலவின் நிழலானது பூமியின் மீது ஊர்ந்து செல்வதைப்போல் இருக்கும். பூமியின் மேற்பரப்பில் நிலவின் நிழல் ஊர்ந்து செல்லக்கூடிய பாதையை தான் முழு சூரிய கிரகணப் பாதை என்று சொல்வோம். இந்த பாதையில் இருக்கும் இடங்களில் முழு சூரிய கிரகணத்தை மக்கள் பார்க்கலாம். சில விநாடிகளிலிருந்து சில நிமிடங்கள் இருட்டாக இருக்கும். இதே இடத்தில் மற்றுமொருமுறை சூரிய கிரகணம் ஏற்பட குறைந்தது 200, 300 வருடங்கள் ஆகலாம்.

அதேபோல் நேற்று நடந்து முடிந்த சூரிய கிரகணமானது நிலவானது பூமிக்கு மிக அருகில் இருந்ததால், சூரிய கிரகணமானது அதிக நிமிடங்கள் நீடித்து இருந்தது.

இந்த சூரிய கிரகணத்தைப் பற்றி சிலர் புரளிகளையும், வதந்திகளைவும் சொல்லி வருகின்றனர். கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் வெளியில் செல்லக்கூடாது என்று சொல்லப்படுவது முற்றிலும் வதந்தி.

அதேபோல் சூரிய கிரகணத்தை ஆதித்தியா எல்1 ஆராய்ச்சி செய்கிறது என்றும் கூறப்படுவது ஒரு புரளி. பூமியிலிருந்து சுமார் 3.50 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் நிலவு உள்ளது. பூமியிலிருந்து 150 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் ஆதித்தியா எல் 1இருக்கிறது. நிலவின் சுற்றுப்பாதையை தாண்டி எல்1 ஆதித்தியா விண்கலம் இயங்கிக்கொண்டு இருக்கிறது. அப்படி இருக்கும்பொழுது எப்படி சூரிய கிரகணத்தை அதனால் ஆய்வு செய்யமுடியும்? .ஆகவே ஆதித்யா விண்கலத்திற்கும் சூரிய கிரகணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்பதை நமக்கு தெளிவுபடுத்தினார்.