சிப் துறையில் Intel நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி AMD-ஐ உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமாக மாற்றி இருக்கிறார் லிசா சு.
எப்படி அவர் இதை சாத்தியப்படுத்தினார்? வாருங்கள் பார்ப்போம்..
2014-ஆம் ஆண்டு Advanced Micro Devices எனப்படும் ஏஎம்டி-யின் சிஇஓ-வாக பொறுப்பேற்றவர் லிசா சு. அப்போது ஏஎம்டி கடும் நஷ்டத்தில் இருந்தது. நிறுவனம் நீண்ட நாள் தாக்குப்பிடிக்காது என்ற நிலைமை. இத்தகைய நெருக்கடியில் இருந்த ஏஎம்டியை, இன்று உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமாக மாற்றி இருக்கிறார் லிசா சு. அதுவும் சிப் தயாரிப்பில் ஜாம்பவானான Intel-ஐ பின்னுக்குத் தள்ளி இருக்கிறார்.
இன்று உலகின் மிக முக்கியத்துவம் வாய்ந்த தயாரிப்பு என்றால் அது சிப் என்று அழைக்கப்படும் செமிகண்டக்டர்தான். இத்துறைதான் உலகின் தொழில்நுட்ப நகர்வைத் தீர்மானித்துக்கொண்டிருக்கிறது. கணினி, மொபைல் முதல் கார், மருத்துவ உபகரணங்கள் என எல்லா தளங்களிலும் இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது.
1969ல் அமெரிக்காவின் கல்ஃபோர்னியாவின் சாண்டா கிளாரா நகரில் தொடங்கப்பட்ட ஏஎம்டி-க்கு அப்போது எந்தத் தனித்துவமும் கிடையாது. காரணம், இன்டெல் என்ன சிப்பைத் தயாரிக்கிறதோ அதை நகல் செய்யும் வேலையைத்தான் ஏஎம்டி செய்துவந்தது.
இதனால் 2000-களின் இறுதியில், ஏஎம்டி கடும் நஷ்டத்தை எதிர்கொண்டது. இனி என்ன செய்வது என்ற குழப்பத்தில் ஆழ்ந்தார் ஏஎம்டி நிறுவனர் ஜெர்ரி சாண்டர்ஸ். அப்போது அவர் முன்பு இருந்த ஒரே வாய்ப்புதான் லிசா சு.
செமிகண்டக்டர் துறையில் ஆழ்ந்த அனுபவம் கொண்ட லிசா சு 2014-ஆம் ஆண்டு, ஏஎம்டியின் சிஇஓ-வாக நியமிக்கப்பட்ட போது அவருக்கு வயது 45. கணினிக்கான சிப் உருவாக்கத்தில் இனி பெரிய வளர்ச்சி இல்லை என்பதை உணர்ந்து, டேட்டா சென்டர்களுக்கான சிப்பை உருவாக்க முடிவு செய்தார்.
“இதுவரையில் சந்தையில் இருந்த சிப்களை விடவும் 40% வேகம் கொண்ட அதிதிறன் சிப்களை நாம் உருவாக்க வேண்டும்” என்பதை இலக்காக நிர்ணயித்தார். இதற்கென்று செமிகண்டக்டர் துறையில் ஆழ்ந்த நிபுணத்துவம் கொண்டவர்களை ஏஎம்டி நிறுவனத்தில் இணைத்தார்.
2017இல் ஏஎம்டி அதன் Zen Architecture சிப்களை அறிமுகம் செய்தது. விலையோ, இன்டெலின் சிப்பைவிட பாதிதான். ஆனால், செயல்திறனோ இன்டலைவிட அதிவேகம். செமிகண்டக்டர் துறையில் பெரும் அதிர்வை அந்த சிப் உருவாக்கியது.
ஒவ்வொரு ஆண்டும் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து, இன்டெலின் ஆதிக்கத்துக்கு சவால் விட ஆரம்பித்தது லிசா சு தலைமையிலான ஏஎம்டி.
2022-ம் ஆண்டு, இன்டெலைவிடவும் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக உருவெடுத்து ஏஎம்டி வரலாறு படைத்தது. இன்று இன்டெலின் சந்தை மதிப்பு 88 பில்லியன் டாலர். ஏஎம்டியின் மதிப்போ 200 பில்லியன் டாலராக இருக்கிறது.