டெக்

மலிவு விலையில் இணைய வசதி - அமேசான் ‘மெகா ப்ளான்’

webteam

3000க்கும் அதிகமான செயற்கைக்கோள்கள் உதவியுடன் மலிவு விலையில் இணைய வசதியை வழங்க அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் ஆன்லைன் வர்த்தகத்தில் தற்போது உச்சத்தில் உள்ளது. யாரும் செல்ல முடியாத இடங்களிலும் சென்று பொருட்களை வழங்கி வருகிறார்கள்.  மற்ற நிறுவனங்களுடன் கைகோர்த்து ஆன்லைன் விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டுள்ள அமேசான் அடுத்து தன் கவனத்தை இணையம் பக்கம் திருப்பியுள்ளது. 

அமேசான் நிறுவனம் ‘புராஜெக்ட் குய்பர்’ என்ற திட்டத்தின் மூலம் அதிவேக இணைய வசதி வழங்க திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக அமேசான் நிறுவனம், 3,236 செயற்கைக்கோள்களை பயன்படுத்தவுள்ளது. இதற்காக அமேசான் பெரும் தொகையை முதலீடு செய்திருப்பதாகவும், இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் அனைவருக்கும் குறைவான கட்டணத்தில் அதிவேக இணைய வசதி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இணைய வசதியை வழங்க முனைப்புடன் செயல்படும் மற்ற நிறுவனங்களுடனும் கைகோர்த்து செயல்படுவோம் என்றும் அமேசான் தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் உலக மக்கள் தொகையில் 95% பேருக்கு இணைய வசதி கிடைக்கும் என்றும் அமேசான் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்திற்காக பெரும் தொகையை அமேசான் முதலீடு செய்ய இருப்பதாகவும், இது நீண்ட கால திட்டமென்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘குய்பர்’செயற்கைக்கோள்கள் எங்கு தயாராக உள்ளன, எப்போது இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது போன்ற எந்தத் தகவலையும் அமேசான் நிறுவனம் தெரிவிக்கவில்லை.