ஏஐ வாஷிங் மெஷின் எக்ஸ் தளம்
டெக்

வெறும் 15 நிமிடங்கள்தான்... மனிதனை குளிப்பாட்டும் ஏஐ வாஷிங் மெஷின்!

துணி துவைக்கும் வாஷிங் மிஷினை பார்த்திருப்போம், பயன்படுத்தி இருப்போம்.. அதேபோல், மனிதர்களை குளிப்பாட்டுவதற்கென வாஷிங் மிஷின் வரப்போகிறது என்றால் நம்ப முடிகிறதா?. அதையும் சாத்தியமாக்கி காட்டியிருக்கிறது இன்றைய அறிவியல் உலகம்.

PT WEB

துணி துவைக்கும் வாஷிங் மிஷினை பார்த்திருப்போம், பயன்படுத்தி இருப்போம்.. அதேபோல், மனிதர்களை குளிப்பாட்டுவதற்கென வாஷிங் மிஷின் வரப்போகிறது என்றால் நம்ப முடிகிறதா?. அதையும் சாத்தியமாக்கி காட்டியிருக்கிறது இன்றைய அறிவியல் உலகம்.

இன்றைய நவீன உலகில், இளம் தலைமுறையினர் பலரும் தினசரி குளிப்பதற்கு கூட அலட்டிக் கொள்கின்றனர். குளித்து உடலை சுத்தமாக வைத்துக்கொள்வதை ஒரு பெரிய வேலையாக கருதுகின்றனர். அவர்களுக்காகவே ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் இயங்கும் "ஹியூமன் வாஷிங் மிஷினை" கண்டுபிடித்திருக்கிறது ஜப்பான் நிறுவனம்.

ஏஐ வாஷிங் மெஷின்

ஜப்பானின் ஒசாகாவை சேர்ந்த ஷவர்ஹெட் நிறுவனமான "சயின்ஸ் கோ", இந்த மிஷினை கண்டுபிடித்து, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த மனித வாஷிங் மிஷின், ஒருவரின் உடலை கழுவி, ஈரத்தை காயவைக்க 15 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்கிறது.

மிஷினின் உள்ளே இருக்கும் பிளாஸ்டிக் நாற்காலி மீது ஏறி அமர்ந்ததும், பாதியளவு வெதுவெதுப்பான தண்ணீர் நிரம்பும். பின்னர் மிஷினில் இருந்து வெடிக்கும் நீர் குமிழிகள், உடலில் இருந்து அழுக்குகளை நீக்கும். நாற்காலியில் உள்ள மின் உணரிகள், உடலின் உயிரியல் தகவல்களை சேகரித்து, உள்ளே இருப்பவர் சரியான வெப்பநிலையில் குளிப்பாட்டப்படுவதை உறுதி செய்யும்.

ஏஐ வாஷிங் மெஷின்

மேலும், மிஷினில் உள்ள ஏஐ சென்சார்கள், மனித உடலின் உயிரியல் தகவல்களை ஆராய்ந்து, மனதை அமைதிப்படுத்தும் வீடியோவை நாற்காலி முன் ஒளிபரப்பும். இந்த மிஷின், மனிதனின் உடலை சுத்தம் செய்வது மட்டுமல்லாமல், மனதுக்கும் புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறதாம். இந்த அதிநவீன மனித வாஷிங் மிஷின், ஒசாகா கன்சாய் கண்காட்சியில் விரைவில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. அங்கு ஆயிரம் விருந்தினர்கள் மனித வாஷிங் மிஷினில் 15 நிமிட விரைவு குளியலை முயற்சிக்க உள்ளனர்.