டெக்

தமிழரின் தலைமையில் ஏவப்படும் முதல் ராக்கெட் !

தமிழகத்தைச் சேர்ந்த கே.சிவன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (இஸ்ரோ) தலைவராக பொறுப்பேற்ற பின்பு தன்னுடைய முதல்
செயற்கைக்கோளை வரும் வியாழக்கிழமை விண்ணில் ஏவ இருக்கிறார். ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து வியாழக்கிழமை மாலை 4.56 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி எஃப்08 ராக்கெட் மூலம் ஜிசாட் 6ஏ ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளது. இஸ்ரோவில் பல ஆண்டுகளாக பணியாற்றும் சிவன், பல்வேறு ராக்கெட் ஏவுதல் முயற்சியில் பங்காற்றியுள்ளார். ஆனால், வியாழக்கிழமை ஏவப்படும் ஜிஎஸ்எல்வி எஃப் 08 ராக்கெட் சிவனுக்கு ரொம்ப ஸ்பெஷல். இது அவர் இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்ற பின், அவர் தலைமையில் நடக்கும் முதல் அசைன்மென்ட். 

 ‘இஸ்ரோ’ தலைவர் கிரண் குமாரின் பதவிக் காலம் முடிந்ததையடுத்து புதிய தலைவராக கே.சிவன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். சிவன், இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றதற்கு முன்பு விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக பொறுப்பு வகித்து வந்தார். தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கே.சிவன்.  இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் திட்டமிடுதல் மற்றும் வடிவமைப்புக் குழுவில் கடந்த 1982 இணைந்த சிவன், அந்த ராக்கெட் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றினார். இஸ்ரோவின் மிகப்பெரிய விண்வெளி நிலையமாகக் கருதப்படும் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி நிலைய இயக்குநராகப் பணியாற்றுவதற்கு முன்பாக, நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள திரவ இயக்கத் திட்ட மையத்தின் இயக்குநராக சிவன் பணியாற்றினார். சென்னை எம்.ஐ.டி. கல்விநிறுவனத்தில் ஏரோநாட்டிக்கல் பாடப்பிரிவில் கடந்த 1980-ல் பட்டம்பெற்ற சிவன், கடந்த 2006-ம் ஆண்டில் மும்பை ஐ.ஐ.டி-யில் முனைவர் பட்டத்தைப் பெற்றார். இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பொறுப்பேற்று இருப்பது இதுவே முதல்முறை.