டெக்

நூற்றாண்டின் நீண்ட நேர சந்திர கிரகணம் இன்று...!

webteam

எண்ணற்ற அதிசயங்களை தாங்கி நிற்கும் வான்வெளியில் இன்று அரிய காட்சியாக, சரியான நேர்கோட்டில் அமையவுள்ள சந்திரகிரகணம் 21ஆவது நூற்றாண்டின் மிக நீண்ட நேர சந்திர கிரகணமாக இரவில் நிகழவுள்ளது.


வானில் ஏற்படும் மாற்றங்கள் ஒவ்வொன்றும் அதிசயமானவை. அப்படி ஒரு அதிசயம் இன்று நிகழப் போகிறது. இந்த நூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகணத்தை காண பலர் ஆர்வமுடன் உள்ளனர். சூரியன், பூமி, சந்திரன் ‌ஒரே நேர் கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகின்றது. பொதுவாக சந்திர கிரகணம் சில மணித்துளிக‌ள் நீடித்து பின் படிபடியாக விலகிவிடும். ஆனால் ‌இன்றைய சந்திரகிரகணம் தான் மொத்தம் 103 நிமிடங்கள் அதாவது 1மணி நேரம் 43நிமிடங்கள் வரை நீடிக்கும் என அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் பல பகுதிகளில் இந்த சந்திர கிரகணத்தை காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது‌. சரியாக இன்று இரவு 11.54மணிக்கு தொடங்கி அதிகாலை 3.49மணி வரை நிகழும் என்றும், இதற்கிடைப்பட்ட நேரமான 1மணி முதல் 2.43 மணி வரை முழு சந்திர கிரகணத்தை காணலாம் என அறிவியல் ஆய்வாளர்கள் தெ‌ரிவித்துள்ளனர். ஆனால் தற்போது மழை பெ‌ய்து வருவதால் மேலும் மேகமூட்டம் காணப்படுவதால் இதனை காண்பதில் சிக்கல் உள்ளது. சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என்பதால் இந்த அதிசயத்தைக் காண பலர் ஆர்வமோடு காத்திருக்கின்றனர். சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் மாணவர்கள்,பொதுமக்கள் தொலைநோக்கிகள் மூலம் பார்ப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.