டெக்

ஆடையை போன்று அணிந்துகொள்ளும் ரோபோ

ஆடையை போன்று அணிந்துகொள்ளும் ரோபோ

webteam

ஒரே‌நேரத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஜப்பானைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சூப்பர் ரோபோ உடையை வடிவமைத்துள்ளனர்.

தொழில்துறையில் ரோபோ புரட்சிதான் உலக பொருளாதாரத்தில் திருப்பு முனையாக உள்ளது. தொழில்நுட்ப புரட்சியால் அனைத்து துறைகளிலும் உள்ள மனித உழைப்பு பணிகள்கூட ரோபோக்கள் வசமாகிவிடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஆடைபோன்று அணிந்துகொள்ளும் ரோபோ ஒன்றை டோக்கியோ மற்றும் கியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

மனிதர்களை போல இரண்டு கைகளும் தலைகளும் உள்ள இந்த ரோபோ வித்தியாசமான தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.‌ "பியூஷன்" என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோவை அணிந்து கொண்டு ஒரே நேரத்தில் ஒருவர் பல வேலைகளை செய்ய முடியும். ரோபோவின் இரண்டு கைகள் நம்முடைய இரண்டு கைகளுடன் சேர்த்து 4 கைகள் கிடைக்கும். எனவே நினைக்கும் நேரத்தில் வேலைகளை எளிதாக செய்து முடிக்க முடியும். ரோபோக்களை அணிந்து கொண்டிருப்பவரும், தொலைவில் இருந்து ஒருவரும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்க முடியும். விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் டெலிபோர்ட் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோவுக்கு தொலைவில் இருக்கும் ஒருவர் வி.ஆர் ஹெட்செட் அணிந்தபடி கட்டளையிடலாம். இந்த ரோபோ ஆகஸ்ட் மாதம் கனடாவின் வான்கூவர் நகரில் நடைபெற்ற சிக்ரப் 2018 மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டது.

ரோபோ கைகள் சிறிய பொருட்களை லாவகமாக பிடிப்பது, மனித கைகள் போன்று நெளிவு தன்மை கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் பியூஷன் ரோபோ செய்கிறது. ரோபோவை இயக்கும் வீரர் கராத்தே வீரராக இருந்து செய்கைகளை செய்தால் ரோபோவும் கராத்தே செய்வது போன்று பாவனை செய்யும். அவர் ஒரு நடன ஆசிரியராக இருந்தால், அவரை போலவே கைகளில் நடன முத்திரைகளை காண்பிக்கும். முன் நிற்பவர்கள் செய்யும் வேலைகளை கவனிக்க ரோபோக்களில் இரண்டு கேமராக்களும், பயனர்கள் கூறும் கட்டளைகளை கிரகித்துக் கொள்ள வசதியாக ஒலி கருவிகளும் பியூஷன் ரோபோவில் பொருத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில் மனிதனும், ரோபோவும் இணைந்து இயங்கக்கூடிய தொழில்நுட்பத்தில் இந்த ரோபோ உடை வடிவமைக்கப்பட்டுள்ளது.