டெக்

ராமநாதபுரம்: பேட்டரியில் ஓடும் சைக்கிளை கண்டுபிடித்து அசத்திய 13 வயது சிறுவன்!

ராமநாதபுரம்: பேட்டரியில் ஓடும் சைக்கிளை கண்டுபிடித்து அசத்திய 13 வயது சிறுவன்!

kaleelrahman

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேட்டரியில் இயங்கும் சைக்கிளை கண்டுபிடித்து 13 வயது சிறுவன் அசத்தி வருகிறார். அரசு ஊக்கப்படுத்தினால் பல இயந்திரங்களை கண்டுபிடிக்க முடியும் என்று நம்பிக்கையுடன் கூறினார்.

கமுதி அருகே ராமசாமிபட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டி – ஸ்ரீதேவி தம்பதியரின் 13 வயது மகன் சிவசங்கர். இவர் ராமசாமிபட்டி அருகேயுள்ள ரெட்டியபட்டி தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் நடக்கும் அறிவியல் கண்காட்சியில் தண்ணீரை வீணாக்காமல் பேட்டரியில் செயல்படும் சிறிய ரக நீரூற்று, டிராக்டர் டேங்கர், கலப்பைகள் மற்றும் கதிரடிக்கும் இயந்திரங்களை தயாரித்து, மாவட்ட அளவில் பல பரிசுகளை வென்றுள்ளார்.

தற்போது கொரோனா காலத்தில் வீணாக பொழுதை கழிக்காமல் சூரிய ஒளியில் இயங்கும் காரை தயாரிக்க உள்ளதாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதற்கு செலவு அதிகமாகும் அதனால் பள்ளிக்கு சைக்கிளில் தானே சென்று வருகிறாய் அதனால் சைக்கிளை சூரிய ஒளி அல்லது பேட்டரியில் இயங்கும் வகையில் வடிவமைக்கும்படி, சிவசங்கரை பெற்றோர் உற்சாகப் படுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மாணவன் சிவசங்கர், தனது சைக்கிளில் 9–12 ஆம்சில் இயங்கும் வகையில் இரு பேட்டரிகளை 4 ஆயிரம் ரூபாய்க்கும், ஆக்ஸிலேட்டர் உட்பட மற்ற உதிரி பாகங்களை ‘ஆன்லைனில்’ 7,200 ரூபாய்க்கும், சார்ஜரை ஆயிரம் ரூபாய்க்கும் வாங்கி, தனது சைக்கிளை பேட்டரியில் இயங்கும் வகையில் வடிவமைத்து, சாதனை படைத்துள்ளார்.

இரு பேட்டரிகளை 4 மணிநேரம் சார்ஜ் ஏற்றினால், 25கி.மீ. தூரம்வரை செல்லும் வகையில் சைக்கிளை வடிவமைத்துள்ளதால், மாணவனின் சொந்த ஊரான ராமசாமி பட்டியிலிருந்து 6கி.மீ. தூரத்தில் உள்ள தான் படிக்கும் பள்ளிக்கு சைக்கிளில் தனது தங்கை பாண்டீஸ்வரியுடன் சென்று வர சிவசங்கர் திட்டமிட்டுள்ளார்.

இதேபோல் பிவிசி பிளாஸ்டிக் பைப்பில், ‘புளூடூத்’ தில் இயங்கும் ஸ்பீக்களையும் குறைந்த செலவில் புதிதாக வடிவமைத்துள்ள மாணவன் சிவசங்கர் கூறுகையில், ‘‘ எனது பெற்றோர் எனக்கு அளித்த உற்சாகமே, பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் ‘எலக்ட்ரிக்’ பொருட்களை தயாரிக்க உறுதுணையாக இருந்தது. அதன் தொடர்ச்சியே இந்த பேட்டரியில் இயங்கும் சைக்கிள். துவக்கத்தில் சூரிய ஒளியில் இயங்கும் சைக்கிள் தயாரிக்கவே ஆசைப்பட்டேன். பொருளாதார சிக்கலால், இந்த பேட்டரி சைக்கிளை தயாரித்துள்ளேன். பொருளாதார உதவி இருந்தால், சூரிய ஒளியில் இயங்கும் காரினை வடிவமைப்பேன் என்றார்.

பேட்டரி சைக்கிள் கண்டுபிடிப்பால், எனக்கும், என் தங்கைக்கும் பள்ளிக்கு வாகனத்தில் சென்று வரும் செலவு மிச்சம். அடுத்து எனது வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் அனைத்தையும் சூரிய ஒளியில் இயங்கும் வகையில் வடிவமைக்க திட்டமிட்டுள்ளேன் என்று தெரிவித்தவர், அரசு எனக்கு பொருளாதார உதவி செய்யும் பட்சத்தில் இன்னும் பல புதிய கண்டுபிடிக்க மேற்கொள்ள முடியும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.