இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் இந்தியாவில் மட்டும் 16 மில்லியன் போலி கணக்குகள் மூலம் பல்வேறு நிறுவனங்களின் பொருட்களை விளம்பரம் செய்து, மக்களிடம் அவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருவது ஒரு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் அதிகமாக நிழற்படம் பகிரப்படும் தளமாக இன்ஸ்டாகிராம் இருந்து வருகிறது. இந்தத் தளத்தில் இந்தியாவிலும் அதிக பயனாளர்கள் உள்ளனர். இந்தத் தளத்தில் வாடிக்கையாளர்களை ஈர்க்க பல நிறுவனங்கள் முயன்று வருகின்றன. அவர்கள் தங்களின் உற்பத்தி பொருட்களை சில கணக்குகள் வழியே மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன. அவ்வாறு விளம்பரம் செய்யப்படும் கணக்குகளை மக்கள் அதிகம் பின்தொடர ஆரம்பிக்கின்றனர். அவ்வாறு மக்களிடம் செல்வாக்கு செலுத்தி வரும் பல கணக்குகள் போலியானவை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
ஒரு ஆன்லைன் நிறுவனம் இன்ஸ்டாகிராம் தளத்தில் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வரும் கணக்குகள் குறித்து ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வில் அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் 49 மில்லியன் போலி கணக்குகள் மக்களிடம் செல்வாக்கு செலுத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக பிரேசில் நாட்டில் 27 மில்லியன் போலி கணக்குகள் மக்களிடம் செல்வாக்கு செலுத்தி வருவது தெரிய வந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை மட்டும் 16 மில்லியன் போலி கணக்குகள் மக்களிடம் செல்வாக்கு செலுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் போலி கணக்குகள் மூலம் நிறுவனங்களுக்கு 750 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அத்துடன் இன்ஸ்டாகிராமில் இந்தச் செல்வாக்கு மிக்க போலி கணக்குகள் மூலம் நடைபெறும் பரிவர்த்தனைகள் மட்டும் 2 பில்லியன் டாலர் அளவிற்கு அதிகரித்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.