டெக்

“எடிட் பட்டனை சோதனை செய்து வருகிறோம்” - ட்விட்டரின் அறிவிப்பால் பயனர்கள் மகிழ்ச்சி

webteam

செய்திகள் பரிமாற்றத்திற்கான சமூக வலைதளங்களில் ஃபேஸ்புக்கும், ட்விட்டரும் முன்னணியில் இருக்கின்றன. பல்வேறு செய்திகளும் உடனுக்குடன் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி விடுகிறது. அவ்வாறு பரவும் செய்தியில் தவறு ஏதேனும் இருந்தால், ட்விட்டரில் அதை திருத்த (எடிட் செய்ய) இயலாது. மாறாக நாம் மொத்த பதிவையே நீக்க வேண்டியிருக்கிறது.

இதற்கு தீர்வு காண மற்ற சமூக வலைதளங்களை போல பதிவுகளை திருத்தும் வசதியை அதாவது எடிட் செய்யும் வசதியை வழங்குமாறு பல ஆண்டுகளாக பயனர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ட்விட்டர் நிறுவனமும் இந்த கோரிக்கையை பரிசீலித்து வருவதாக தெரிவித்து இருந்தது. இந்நிலையில் பதிவுகளை எடிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்த ட்விட்டர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை ட்விட்டர் தனது அதிகாரபூர்வ பக்கத்தில் தெரிவித்து இருப்பதால் பயனர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக ட்விட்டர் வெளியிட்டுள்ள பதிவில், “நாங்கள் எடிட் பட்டனை சோதனை செய்து வருகிறோம். ஆதலால் நீங்கள் சில திருத்தப்பட்ட (எடிட் செய்யப்பட்ட) ட்வீட்களை பார்க்க நேரிடலாம். ஆம்.! அது நடக்கிறது! நீங்களும் நன்றாக இருப்பீர்கள்!” என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் சோதனை முடிவடைந்து எடிட் செய்யும் வசதி எப்போது முழுமையாக பயனர்களுக்கு வழங்கப்படும் என ட்விட்டர் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் வெகு விரைவில் எடிட் வசதி வரவுள்ளதால் பயனர்கள் உற்சாகத்துடன் ரீட்வீட்களை பறக்கவிட்டு கொண்டிருக்கின்றனர்.