வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் விலங்குகளின் நடவடிக்கைகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக விலங்குகளின் ரத்த மாதிரிகளை சேகரித்து பூங்கா டாக்டர்கள் பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தாம்பரத்தை அடுத்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து, கடந்தாண்டு மார்ச், 17ம் தேதி முதல் பூங்கா மூடப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், நவம்பர் 11ம் தேதி முதல் திறக்கப்பட்டது. அதன் பின், ஓரளவு பார்வையாளர்கள் வந்தனர்.
தற்போது சில தினங்களாக, மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், அரசு ஊரடங்கில் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், காதல் ஜோடிகளை தவிர, குடும்பமாக பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்தே காணப்பட்டது. கடந்த சில நாட்களில் மொத்தமாக 200 முதல், 300 பார்வையாளர்கள் மட்டுமே வந்ததாக, பூங்கா அதிகாரிகள் கூறினர்.
பார்வையாளர்கள் வருகை குறைந்துள்ளதால், பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் தொற்று பரவலை தடுக்க இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை பூங்கா மூடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் யாருக்கும் அனுமதி கிடையாது. மேலும் இப்பூங்காவில் வெள்ளை புலிகள், வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்குகள், காண்டாமிருகம், நீர்யானை உள்ளிட்ட முக்கிய விலங்குகள் உள்ள பகுதிகளில் பூங்கா நிர்வாகம் கண்காணிப்பு சிசிடிவி கேமராக்களை பொருத்தி அதில் பதிவாகும் காட்சிகளைக் கொண்டு விலங்குகளின் செயல்பாடுகளையும், நடவடிக்கைகளையும் தொடர்ந்து 24 மணி நேரமும் பூங்கா அலுவலக ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.
அப்படி கண்காணிக்கும் போது விலங்குகளின் நடவடிக்கையில் ஏதாவது மாற்றம் இருந்தால் உடனடியாக பூங்கா டாக்டர்கள், விலங்குகளின் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்யவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது பூங்காவில் விலங்குகள் கூண்டு மற்றும் இருப்பிடம் பகுதியில் அடிக்கடி கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கப்படுகிறது.
தற்போது கோடைகாலம் என்பதால் கடுமையான வெயில் அடிக்கிறது. இதனால் பூங்காவில் உள்ள மனித குரங்குகள் மற்றும் கரடிகளுக்கு ஐஸ் ஸ்கூப்பில் வைக்கப்பட்ட பழங்களை பூங்கா நிர்வாகம் வழங்குகிறது. மேலும் பறவைகள் இருக்கும் கூண்டுகளில் கோணிப் பைகளை வைத்து அதில் தண்ணீர் பீச்சி அடிக்கப்படுகிறது யானைகளுக்கும் ஷவர் குளியல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான விலங்குகள் உடலில் உள்ள வெப்பத்தை தனித்துக் கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது .