தமிழ்நாடு

வெளிமாநில வாகனங்களுக்கு தடை : ஜிப்மர் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அவதி

வெளிமாநில வாகனங்களுக்கு தடை : ஜிப்மர் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அவதி

webteam

கடலூரிலிருந்து புதுச்சேரிக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் ஜிப்மர் அரசு மருத்துவமனைக்கு வரும் மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி அரசு பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அந்த வகையில், புதுச்சேரியில் இன்று இரவு 9 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. இன்று மாலை 6 மணி முதல் மதுபானக் கடைகளை மூடவும், ஆன்லைன் உணவு நிறுவனங்கள் செயல்படத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று மாலை 5 மணி முதல் தொழிற்சாலைகள், பெரிய நிறுவனங்களை மூடவும் அத்தியாவசிய பொருட்கள் தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் மூடவேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேவையின்றி இருசக்கர வாகனங்களில் செல்லவும் வெளி மாநில வாகனங்களுக்கு தடை விதித்தும் புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், கடலூரிலிருந்து புதுச்சேரிக்கு செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. கடலூர், அரியலூர், பெரம்பலூர் பகுதிகளிலிருந்து புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு பெரும்பாலான மக்கள் சென்று வரும் நிலையில், தற்போது, பேருந்து செல்லாததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். கடலூரிலிருந்து புதுச்சேரி வழியாக சென்னைக்கு வந்து செல்லும் பேருந்துகள், விழுப்புரம் வழியாக இயக்கப்படுகின்றன.